அமராவதி: ஆந்திர மாநிலம் கடப்பா மாவட்டத்தில் ஜெலட்டின் குச்சிகள் வெடித்து 10 கூலி தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
கடப்பா மாவட்டத்தில் உள்ள மாமிலப்பள்ளி கிராமத்தில் தனியாருக்குச் சொந்தமான சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் குவாரி உள்ளது. சுண்ணாம்புக்கல் வெட்டி எடுக்கும் பணியில் பயன்படுத்துவதற்காக வெளியூர்களிலிருந்து ஜெலட்டின் குச்சிகளை வரவழைப்பது வழக்கம்.
அதே வகையில் நேற்றும் ஜெலட்டின் குச்சிகள் வரவழைக்கப்பட்டு லாரியில் இருந்து இறக்கி வைக்கப்பட்டன. அப்போது எதிர்பாராதவிதமாக ஜெலட்டின் குச்சி ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது.
விபத்தில் ஏராளமான அளவில் ஜெலட்டின் குச்சிகள் தொடர்ந்து வெடித்து அந்தப் பகுதி போர்க்களம் போல் மாறியது.
விபத்தில் ஜெலட்டின் குச்சிகளை இறக்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் 10 பேர் உடல் சிதறி மரணமடைந்தனர். மேலும் சிலர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளுக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
விபத்து பற்றிய தகவலறிந்த கடப்பா மாவட்ட போலிஸ் அதிகாரி அன்பு ராஜன் உத்தரவின்பேரில் அங்கு சென்றுள்ள போலிசார் வழக்குப் பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.

