கோல்கத்தா: நந்திகிராம் தொகுதியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தோற்றதால் விரக்தியில் திரிணாமூல் காங்கிரஸ் கட்சித் தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. அதற்குப் பதிலடியாக பாஜக தொண்டர்களும் வன்முறையில் ஈடுபட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவித்தன. மாநிலத்தின் பல இடங்களில் வெடித்த மோதலால் சுமார் 14 பேர் கொல்லப்பட்டிருப்பதாக மேற்கு வங்க போலிசார் தெரிவிக்கின்றனர். அவர்களில் 10 பேர் பாஜக தொண்டர்கள் என்று கூறப்படுகிறது.
மேற்கு வங்க வன்முறையைக் கண்டித்து தலைநகர் கோல்கத்தாவில் வெள்ளிக்கிழமை பாஜக போராட்டம் நடத்தியது. இதில் பங்கேற்ற பாஜக மகளிர் அணி தேசிய தலைவரும் கோவை தெற்குத் தொகுதி எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன், பாஜக நாடாளுமன்ற உறுப்பினர் ரூபா கங்குலி, மேற்கு வங்க மாநில பாஜக மகளிர் அணித் தலைவர் அக்னி மித்ரா பால் உள்ளிட்டோரை போலிசார் கைது செய்தனர்.

