"கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் கடுமையாக உள்ளது"
சென்னை: கொரோனா கிருமித்தொற்று பேரிடரில் இருந்து மக்களைப் பாதுகாப்பதே தமிழக அரசின் முதன்மைப் பணி என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் உறுப்பினர்களாக பொறுப்பேற்றுக் கொண்ட புதிய மக்கள் பிரதிதிநிதிகளுக்கு அவர் நேற்று முன்தினம் தமது வாழ்த்துகளை தெரிவித்தார்.
பின்னர் பேரவையில் உரையாற்றிய அவர், தமிழகத்தை மீட்க கட்சிப் பாகுபாடு இன்றி அனைவரும் பணியாற்ற வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.
"இந்திய ஒன்றியம் முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை கடும் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ள நிலையில், தமிழகத்திலும் அதன் தாக்கம் கடுமையாக இருப்பதை உணர்ந்துள்ளோம்.
"தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருப்பதுடன் இந்த தடைக்காலத்தில் மக்கள் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் வகையில் ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் தலா 2 ஆயிரம் ரூபாய் வழங்கப்படுகிறது. தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உயிர்வாயு, படுக்கை வசதிகள், மருந்துகள் ஆகியவை தடையின்றிக் கிடைப்பதற்கான முயற்சிகள் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன," என்றார் முதல்வர் மு.க. ஸ்டாலின்.
நிலைமையை முழுமையாக கட்டுக்குள் கொண்டு வருவதற்கும் மக்களுக்கு ஏற்படும் நெருக்கடிகளைத் தவிர்ப்பதற்கும் அரசு முழுமையான அர்ப்பணிப்புடன் செயல்பட்டு வருவதாக குறிப்பிட்ட அவர், அரசுத்துறை அதிகாரிகள், முன்களப் பணியாளர்களான மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரும் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த தன்னலம் கருதாமல் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்தார்.
தேர்தல் களத்தில் வெவ்வேறு கூட்டணிகளில் வெவ்வேறு கட்சி சார்ந்தவர்களாக களம் கண்டு வென்றிருந்தாலும் மக்கள் நலன் காப்பதில் ஒருமித்த சிந்தனையுடன் கட்சிப் பாகுபாடின்றி பணியாற்ற வேண்டிய கடமையும் பொறுப்பும் நடப்பு எம்எல்ஏக்களுக்கு உள்ளது என்றார் முதல்வர் ஸ்டாலின்.
எம்எல்ஏக்கள் தங்கள் தொகுதிகளில் கொரோனா தொற்றுப்பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் தொய்வு அல்லது நெருக்கடி ஏற்பட்டால் உடனடியாக அரசின் கவனத்துக்குக் கொண்டுவர வேண்டும் என கேட்டுக்கொண்ட அவர், மக்களைப் பாதுகாப்பதில் தமிழக அரசு உறுதியான செயல்பாட்டை மேற்கொள்ளும் எனும் உத்தரவாதத்தை அளிப்பதாகத் தெரிவித்தார்.

