செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
266037e8-886f-4efb-9171-9e69a8366ab8
-

செவ்வாய்க்கிழமை 29,272 பேர் பாதிப்பு; 298 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரேநாளில் 29,272 பேருக்கு புதிதாக கொரோனா கிருமி தொற்றியுள்ளது. மேலும் ஒரேநாளில் 298 பேர் கொவிட்-19 நோய்க்கு பலியாகி உள்ளனர். செவ்வாய்க்கிழமை சென்னையில் 7,466 பேரும் கோவையில் 2,650 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். குறைந்தபட்சமாக அரியலூரில் 106 பேர் கொரோனா பிடியில் சிக்கியுள்ளனர். "மாநிலத்தில் இதுவரை 73.8 மில்லியன் பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதில், 1.43 மில்லியன் பேருக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதுவரை 16,178 பேர் கிருமித் தொற்றால் உயிரிழந்து விட்டனர்," என்று மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

ஊரடங்கு புது தளர்வுகள் அறிவிப்பு

சென்னை: ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், சில புது தளர்வுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. காய்கறி, மலர்கள் விற்பனை செய்ய விதிக்கப்பட்டுள்ள அதே நிபந்தனை களைப் பின்பற்றி பழ வியாபாரமும் மேற்கொள்ளலாம். தொழிற்சாலைகளில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள ஒரு நாள் மட்டும் குறைந்த அளவிலான பணியாளர்கள் அனுமதிக்கப்படுவர். இந்த ஊரடங்கு காலத்தில் செயல்பட அனுமதிக்கப்பட்ட தொடர் உற்பத்தி தொழிற்சாலைகள், அத்தியாவசிய பொருள்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை கள் இயங்குவதில் ஏற்படும் சிக்கல்களுக்கு உதவும் வகையில் 24 மணிநேர சேவை மையம் அமைக்கப்படும் என்றும் அரசு அறிவித்துள்ளது. மேலும் ஆங்கில மருந்து கடைகளுக்கான நிபந்தனைகளைப் பின்பற்றி நாட்டு மருந்து கடைகளும் இயங்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை: தமிழகத்தில்

பாதிப்பு சற்று குறைந்துள்ளது

சென்னை: தமிழகத்தில் மக்களுக்கு எந்தவிதப் பாதிப்பும் இன்றி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், தமிழகத்தில் தொற்றுப்பரவல் சற்று கட்டுப்பட்டிருப்பதாக கூறினார். "மற்ற மாநிலங்களைக் காட்டிலும் தமிழகத்தில் படிப்படியாக தொற்றுப் பரவல் அதிகரித்து வந்தது. எனினும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட காரணத்தால் கடந்த சில தினங்களாக பாதிப்பு குறைந்துள்ளது. ஊரடங்கை மக்கள் முழுமையாகப் பயன்படுத்தி, பாதுகாப்புடன் இருக்க வேண்டும்," என்றார் ராதாகிருஷ்ணன்.