சென்னை: புதுவையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவியேற்கும் முன்பே மூன்று நியமன எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்திருப்பது கண்டனத்திற்குரியது என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
நியமன எம்எல்ஏக்கள் மூலம் புதிய அரசின் உறுதித்தன்மையைச் சீர்குலைத்து கொல்லைப்புறம் வழி ஆட்சியைப் பிடிக்க பாஜக முயற்சி செய்வதாக அவர் சாடியுள்ளார்.
தமிழக நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில், பாஜக தனது செயல்பாடுகளின் மூலமாக மக்கள் அளித்த தீர்ப்பை மாசுபடுத்த முனைவது வேதனைக்குரியது எனக் குறிப்பிட்டுள்ளார்.
புதுவை சட்டப்பேரவை 30 உறுப்பினர்களை மட்டுமே கொண்டுள்ளது என்று சுட்டிக்காட்டியுள்ள அவர், மூன்று நியமன எம்எல்ஏக்கள் மூலம் இந்த எண்ணிக்கையை 33ஆக உயர்த்துவது சட்டப்பேரவை ஜனநாயகத்துக்கு எதிரானது எனத் தெரிவித்துள்ளார்.
"புதுவை முதல்வர் ரங்கசாமி கொரோனா நோய்த்தொற்றுக்கு உள்ளாகி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். சட்டப்பேரவைக்கு இன்னும் சபாநாயகர் தேர்வு செய்யப்படவில்லை. புதிய சட்டப்பேரவை உறுப்பினர்களும் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொள்ளவில்லை.
"அதற்குள் தங்கள் கூட்டணியின் தலைவராக இருக்கும் முதல்வரைக் கூட கலந்து பேசாமல் இப்படியொரு நியமனத்தை மத்திய அரசு செய்து, புதுவை சட்டப்பேரவையில் பாஜகவின் எண்ணிக்கையை 9ஆக உயர்த்தியிருப்பது எதேச்சதிகாரமானது. இத்தகைய போக்கை ஏற்க இயலாது," என்று துரைமுருகன் கூறியுள்ளார்.

