வீட்டை மதுக்கடையாக மாற்றியவர் கைது: 1,355 மதுப்புட்டிகள் பறிமுதல்
திண்டுக்கல்: தன் வீட்டையே மதுக்கடையாக மாற்றியவரை திண்டுக்கல் போலிசார் கைது செய்தனர். அங்குள்ள பள்ளபட்டி பகுதியைச் சேர்ந்த ஆனந்தஜோதி என்பவர் ஊரடங்கின்போது மதுக்கடைகள் மூடப்படும் என்பதை அறிந்து பெட்டி பெட்டியாக மதுப்புட்டிகளை வாங்கி தன் வீட்டில் பதுக்கி உள்ளார். பின்னர் ஊரடங்கு அமலுக்கு வந்ததும் அவற்றை அதிக விலைக்கு விற்றுள்ளார். இது குறித்து புகார் அளிக்கப்பட்டதன் பேரில் அப்பகுதி போலிசார் பள்ளபட்டியில் வீடு வீடாகச் சென்று சோதனை மேற்கொண்டனர். அப்போது ஆனந்தஜோதி வீட்டில் இருந்து 1,355 மதுப்புட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன.
மத்திய அரசை விமர்சித்த ப.சிதம்பரம்
புதுடெல்லி: கொரோனா தொற்றுப்பரவல் தடுப்பு நடவடிக்கைகளை மத்திய அரசு சரியாக மேற்கொள்ளவில்லை என முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் சாடியுள்ளார். இது குறித்து அவர் டுவிட்டரில், 'தொற்று மேலாண்மைக்கான 3 கொள்கைகள்' என்று தலைப்பிட்டு கிண்டலாகப் பதிவிட்டுள்ளார். "எந்த பொருளும் பற்றாக்குறை என்பதை மறு. பற்றாக்குறை இருக்கிறது என்று பல்வேறு ஊடகங்களில் இருந்து வந்தாலும் மிகுந்த பலத்துடன் மறு. குறைந்த அளவு மக்களுக்கு பரிசோதனை மேற்கொண்டு, புதிய தொற்று எண்ணிக்கையை குறைத்துச் சொல். தகனம் செய்யப்படும் இடத்தில் இருந்து வரும் எண்ணிக்கையை புதைத்தல், கொரோனா தொடர்பான இறப்புகளைக் குறைத்து காட்டுதல் ஆகியவற்றுடன் மொத்த கருவுறுதல் வீதத்தை குறைத்துக் காட்டு," என்று மத்திய அரசின் செயல்பாடுகளை மறைமுகமாகச் சாடியுள்ளார் ப.சிதம்பரம்.

