சென்னை: தமிழகத்தில் நேற்று 24 மணி நேர நிலவரப்படி தினசரி தொற்று எண்ணிக்கை 30,000ஐத் தாண்டியுள்ளது. 30,355 பேருக்குத் தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. 293 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன. இதுவரை அங்கு 14,68,864 தொற்று பதிவாகியுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1,72,735. மாண்டோர் எண்ணிக்கை 16,471.
குறிப்பாக சென்னை, செங்கல்பட்டு, கோயம்புத்தூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 46% புதிய தொற்றுப் பாதிப்பு பதிவாகியுள்ளன. தொற்றுக்குப் பலியானவர்களில் பாதிப்பேர் இந்த மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்.
சென்னையில் மட்டும் 7,564 புதிய தொற்றும் 89 தொற்று மரணமும் பதிவாகியுள்ளன. அடுத்தபடியாக செங்கல்பட்டில் 2,670 புதிய தொற்றுகளும் 28 தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன. கோயம்புத்தூரில் தொற்றால் 2,636 பேர் பாதிக்கப்பட்டனர். 18 பேர் பலியாகினர். திருவள்ளூரில் 1,344 புதிய தொற்றுகளும் 21 தொற்று மரணங்களும் பதிவாகியுள்ளன.
மதுரையில் 1,172 பேரும் கன்னியாகுமரியில் 1,076 பேரும் ஈரோட்டில் 961 பேரும் திருச்சியில் 879 பேரும் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தொற்றுக்குப் பலியானவர்களில் 131 பேர் தனியார் மருத்துவமனைகளிலும் 162 பேர் அரசாங்க மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவர்கள். மாண்டவர்களில் நால்வர் 20 ல் இருந்து 30 வயதுப் பிரிவைச் சேர்ந்தவர்கள்.
தமிழகத்தில் எவ்வித நோய்களுக்கும் பாதிக்கப்படாத இளையர்கள் பலர் தொற்றுக்குப் பலியாகியுள்ளதாக தரவுகள் மூலம் தெரியவந்துள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
கடந்த ஒன்றரை மாத காலமாக உடல் ஆரோக்கியத்துடன் உள்ள இளையர்கள் தொற்றுப் பாதிப்புக்கு ஆளாகி தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுவது அதிகரித்துள்ளதாக சென்னை கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை தலைவர் டாக்டர் வசந்தமணி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் செங்கல்பட்டு, கோயம்புத்தூர், காஞ்சிபுரம் உள்ளிட்ட ஏழு மாவட்டங்களில் தீவிரக் கண்காணிப்புப் பிரிவில் ஆக்சிஜனுடன் கூடிய படுக்கைகளுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் இரண்டாம் அலையில் மட்டும் இதுவரை 3,070 காவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில், 70 காவலர்கள் சிகிச்சை பலனளிக்காமல் பலியாகியுள்ளனர்.
திருச்சி மாவட்டத்தில் நேற்று 879 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. 12 பேர் பலியாகிவிட்டனர். இங்கு தினசரி பாதிப்பும் இறப்பு விகிதமும் அதிகரித்துள்ளது. அவர்களில் 32 முதல் 40 விழுக்காட்டினர் 40 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினராக இருப்பதாக மாவட்ட சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் ராம்கணேஷ் கூறினார்.

