திருச்சி: கொரோனா தொற்று இரண்டாவது அலை தீவிரமடைந்து வரும் நிலையில், தொற்று ஏற்படாமல் தடுக்கவும் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் பொதுமக்கள் தற்போது அதிக அளவில் தமிழ் மருத்துவ முறையான சித்த மருத்துவத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பல்வேறு அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுபவர்களுக்கு அலோபதி மருந்துகளுடன் கபசுர குடிநீர், தாளிசாதி சூரணம் போன்ற சித்த மருந்துகளும் வழங்கப்படுகின்றன.
இந்தநிலையில், மாநிலம் முழுவதும் 12 இடங்களில் கொரோனா சிகிச்சைக்கு இயற்கை முறை மருத்துவ மையங்கள் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு கொரோனா சிகிச்சையில் சித்த மருத்துவத்தை உள்ளடக்கிய இயற்கை முறை மருத்துவத்துக்கு அளிக்கப்பட்டுள்ள முக்கியத்துவத்தையே காட்டுகிறது என்கின்றனர் சித்த மருத்துவர்கள்.
சித்த மருத்துவத்தின் பலன்கள் குறித்து திருச்சி மாவட்ட சித்த மருத்துவ அலுவலர் எஸ்.காமராஜ் கூறுகையில், "நிலவேம்பு குடிநீர் டெங்கி காய்ச்சலுக்கு நன்மருந்து. அதைப்போலவே இப்போது நம்மை அச்சுறுத்திவரும் கொரோனா தொற்று சிகிச்சையில் சித்த மருத்துவம் நல்ல பலன் அளித்து வருகிறது," என்றார்.
"தொற்று பாதிப்பில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள நம் உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து சுவாசப் பிரச்சினையைப் போக்க வேண்டும். அதற்கு தாளிசாதி, அமுக்ரா ஆகிய சூரணங்களும், கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், நெல்லிக்காய் லேகியம், உள்ளிட்ட பல மருந்துகளும் அரசு மருத்துவ மனைகளில் இலவசமாகக் கிடைக்கின்றன," என்றார் திரு காமராஜ்.
தமிழக அரசின் உத்தரவைத் தொடர்ந்து திருச்சியில் ஓரிருநாளில் 150 படுக்கைகளுடன் கூடிய கொரோனா சித்த மருத்துவ சிகிச்சை மையம் தொடங்கப்படும்.
இங்கு நோயாளிகளுக்கு இருவேளை கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர், வேது பிடித்தல் மற்றும் இதர சளி, இருமல், காய்ச்சல் போன்றவற்றுக்கு தேவையான சித்த மருந்துகள் மூலம் சிகிச்சை அளிக்கப்படும் என்றார் அவர்.
கொரோனா பாதிப்புக்கு மீண்டும் சித்த மருத்துவம் பார்க்கப்படும் நிலையில் தலைமைச் செயலகத்தில் சித்த மருத்துவர் வீரபாபுவுடன் மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

