செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
2009dd9b-f7b3-4e00-a187-a7bd104f34fc
-

கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை

சென்னை: கொரோனா சிகிச்சைக்கு கூடுதல் கட்டணம் வசூலித்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சேலத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார். அத்துடன் அவ்வாறு ஏதேனும் மருத்துவமனை அதிகமான கட்டணம் வசூலிப்பது தெரிந்தால் உடனே புகார் அளியுங்கள் என்றும் அவர் மக்களிடம் கேட்டுக்கொண்டார். அத்துடன் கொரோனா கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த திட்டங்கள் மக்களிடையே நல்ல வேற்பை பெற்றுள்ளதாகத் தெரிவித்தார்.

திமுக அறக்கட்டளை ரூ.1 கோடி நிதியுதவி

சென்னை: கொரோனாவை எதிர்கொள்ள முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நன்கொடை வழங்குங்கள் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பொதுமக்கள், சமூக நல அமைப்புகள் மற்றும் பெருந்தொழில் நிறுவனங்களிடமும் உலகத் தமிழ் மக்களிடமும் கோரிக்கை விடுத்தார்.

முதல்வரின் கோரிக்கைக்கு இணங்க பல தொழில் நிறுவனங்கள் நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றன. அந்த வகையில் நடிகர் சூர்யா தனது குடும்பத்தினருடன் சென்று முதல்வரைச் சந்தித்து ரூபாய் ஒரு கோடி நிதி வழங்கினார். அதேபோல சன் டிவி குழுமம் ரூபாய்.30 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது. இந்த நிலையில், முதல்வர் பொது நிவாரண நிதிக்கு திமுக அறக்கட்டளை சார்பில் ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

சென்னை - சேலம் விமானச் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது

சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளதால் சென்னையில் இருந்து சேலத்திற்குச் செல்லும் விமானங்கள் காலியாகச் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இருப்பினும் உள்நாட்டு விமானங்களில் அவசர வேலைகளுக்காக பயணம் செல்லலாம் என்று விதிவிலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் தொற்று அச்சம் காரணமாக விமானப் பயணம் மேற்கொள்வதை பலரும் தவிர்த்து வருகின்றனர்.

சென்னையில் உள்நாட்டு விமான நிலையத்தில் போதிய பயணிகளின்றி 126 விமானச் சேவைகள் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் சேலத்திற்கும் சென்னைக்கும் இடையேயான விமானச் சேவை மே 22ஆம் தேதி வரை பத்து நாட்களுக்கு நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சீமானின் தந்தை காலமானார்

சிவகங்கை: நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானின் தந்தை செந்தமிழன் காலமானார். சிவகங்கை மாவட்டம், இளையான்குடி அருகே உள்ள அரணையூரில் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 80. சீமானின் தந்தை மறைவு குறித்த செய்தியை நாம் தமிழர் கட்சி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

மநீம கட்சியில் இருந்து பத்மபிரியா விலகல்

சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து விலகுவதாக மதுரவாயலில் போட்டியிட்ட பத்மபிரியா அறிவித்துள்ளார். தனது களப்பணி எப்போதும் போல இன்னும் சிறப்பாக தொடரும் என அவர் கூறியுள்ளார். அவரைத்தொடர்ந்து முன்னாள் ஐ.ஏ.எஸ். அதிகாரி சந்தோஷ் பாபு-வும் அந்தக் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.