உயிர்வாயு உற்பத்தி நிறுத்தம்
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலையில் முதற்கட்டமாக உற்பத்தி செய்யப்பட்ட ஐந்து டன் உயிர்வாயு, நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. அதனை தொடர்ந்து சென்னை, கோவை உள்ளிட்ட மாவட்டங்களுக்கும் உயிர்வாயு கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் திடீரென ஸ்டெர்லைட் ஆலையின் உயிர்வாயு தயாரிப்புக் கூடத்தில் உள்ள குளிரூட்டும் இயந்திரம் (cooler) பழுதடைந்ததால் நேற்று நள்ளிரவு முதல் உயிர்வாயு தயாரிப்பு நிறுத்தப்பட்டது. இயந்திரத்தை சரி செய்து உற்பத்தியை மீண்டும் தொடங்க 2 முதல் 3 நாட்கள் வரை ஆகும் என்பதால் அடுத்த மூன்று நாட்களுக்கு உயிர்வாயு உற்பத்தி நிறுத்தப்படும் என ஸ்டெர்லைட் ஆலையின் நிர்வாகம் அறிவித்துள்ளது.
அவசர வாகனங்களாக கார்கள்
சென்னை: காய்ச்சல், சளி, இருமல் போன்ற அறிகுறி அல்லது உடல் உபாதைகள் ஏற்பட்டால் தாமதிக்காமல் மருத்துவமனைக்குச் சென்று மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற வேண்டும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் வலியுறுத்தியுள்ளார். "உரிய நேரத்தில் சிகிச்சை பெற்றால் உயிரிழப்புகளை தடுக்க முடியும்," என்று அவர் கூறியுள்ளார்.
இதற்கிடையே கார்கள் அவசர வாகனங்களாக மாற்றப் பட்டு வருகின்றன. திரு ககன்தீப்சிங் பேடி, இரண்டு நாளில் 250 அவசர வாகனங்களை இவ்வாறு மாற்றியுள்ளார். சென்னையில் 15 மண்டலங்களில் இந்த சிறப்பு அவசர வாகனச்சேவை தொடங்கப்பட்டுள்ளது.

