சென்னை: 'உலகத் தமிழர்களே, உயிர் காக்க நிதி வழங்குவீர்,' என்று தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
சமூக வலைத் தளங்களில் வெளியிட்டுள்ள காணொளியில் அவர் இவ்வாறு கேட்டுக் கொண்டதாக தமிழக ஊடகங்கள் தெரிவித்தன.
"தமிழகம் இப்போது இரண்டு மிக முக்கியமான நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது. ஒன்று, கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள மருத்துவ நெருக்கடி; இன்னொன்று நிதி நெருக்கடி.
"கொரோனா முதல் அலையை விட, இரண்டாம் அலை, மிக மோசமானதாக இருக்கிறது.
"கொரோனாவின் வீரியத்தை உணர்ந்து, மருத்துவமனைகள், மருந்துகள், படுக்கைகள், உயிர்வாயு வசதிகள், தடுப்பூசிகள் ஆகிய உள்கட்டமைப்பை இன்னும் அதிகப்படுத்தியாக வேண்டும்.
"படுக்கைகள், மருந்து மற்றும் உயிர்வாயு இருப்பை அதிகரிக்க முழு வேகத்தில் முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது.
"இந்த திடீர் அவசர செலவினங்களுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு தாராளமாக நிதி வழங்குவீர் என வேண்டுகோள் வைத்தேன். கருணை உள்ளத்தோடு பலரும் வழங்கி வருகின்றனர். பலரும் நிதி திரட்டி வருகின்றனர்.
"புலம் பெயர்ந்து சென்ற தமிழர் கள், தாய் தமிழகத்தை மறக்கவில்லை. மருத்துவ நெருக்கடியும், நிதி நெருக்கடியும் இணைந்து சூழும், இந்த நேரத்தில், மக்களை காக்கும் மகத்தான பணியில் மக்கள் தங்களை தாங்களே முன்வந்து ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும்.
"அதிலும் குறிப்பாக புலம் பெயர்ந்த தமிழர்கள், தமிழ் மக்களை காக்கும் முயற்சிக்கு தங்களால் இயன்ற நிதி உதவியை வழங்க வேண்டும்.
"ஈகையும் இரக்கமும் கருணையும் பரந்த உள்ளமும் உடைய தமிழக மக்கள் அனைவரும், தமிழக அரசின் கொரோனா தடுப்பு முயற்சிகளுக்கு கை கொடுக்கிற வகையில் நிதி வழங்க கேட்டுக் கொள்கிறேன்.
"இது, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்காக மட்டுமே பயன்படுத்தப்படும். உயிர்வாயு பயன்படுத்தும் படுக்கைகள், தடுப்பு மருந்துகள், தடுப்பூசி போன்றவற்றுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்," என்று மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

