சென்னை: கொவிட்-19 தொற்றின் தீவிரத்தன்மையைக் குறைக்க உதவும் ரெம்டெசிவிர் மருந்தை பங்ளாதேஷில் இருந்து கடத்தி வந்த எழுவர் கும்பலை போலிசார் கண்டுபிடித்து, கைது செய்தனர்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், ரெம்டெசிவிர் மருந்துக்குக் கடும் தட்டுப்பாடு நிலவுகிறது. இதையடுத்து, அரசே அம்மருந்தை விற்பனை செய்து வருகிறது.
ரெம்டெசிவிர் மருந்தை வாங்க கூட்டம் அலைமோதும் நிலையில், சிலர் வெளிநாடுகளில் இருந்து அம்மருந்தைக் கடத்தி வந்து அதிக விலைக்கு விற்று, கொள்ளை லாபம் ஈட்டுவதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், வாட்ஸ்அப் வழியாக ரெம்டெசிவிர் மருந்து விற்கப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில், தனியார் மருத்துவமனை ஒன்றில் மருந்தாளுநராகப் பணிபுரியும் விஷ்ணு குமார் என்பவரை போலிசார் கைது செய்தனர்.
அவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் கோவில்பட்டியைச் சேர்ந்த சண்முகம், அவரின் சகோதரர், சென்னையைச் சேர்ந்த பிரவீண் குமார், புவனேஸ்வர் ஆகியோர் பிடிபட்டனர். புவனேஸ்வருக்கு ரெம்டெசிவிர் மருந்தை விற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த நிஷித் பண்டாரி என்பவரும் அம்மாநில போலிசாரால் கைது செய்யப்பட்டார்.
இதனிடையே, ரெம்டெசிவிர் மருந்தையும் உயிர்வளி உருளைகளையும் கள்ளச் சந்தையில் விற்போர்மீது குண்டர் சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் எச்சரித்து இருக்கிறார்.

