செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
0d87b3a0-5d56-4a15-b1d0-764db6d7a848
-

ரூ.2,000 உதவித்தொகை விநியோகம்

சென்னை: கொரோனா நிவாரண நிதியாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.4,000 வழங்கப்படும் என்று திமுக தனது தேர்தல் அறிக்கையில் தெரிவித்திருந்தது. அதன்படி, ரேஷன் கடைகள் மூலமாக முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் பணி நேற்று தொடங்கியது. புதிய கட்டுப்பாடுகள் காரணமாக காலை 8 மணி முதல் 12 மணிவரை மட்டும் உதவித்தொகை வழங்கப்படும். இம்மாதம் 22ஆம் தேதிக்குள் நிவாரணத் தொகை வழங்கும் பணியை நிறைவுசெய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை: 1,727 வாகனங்கள் பறிமுதல்

சென்னை: கொரோனா ஊரடங்கு விதிகளை மீறியதாகக் கூறி, சென்னையில் நேற்று முன்தினம் ஒரே நாளில் 2,079 வழக்குகள் பதிவுசெய்து 1,727 வாகனங்களைப் பறிமுதல் செய்துள்ளதாக போலிசார் தெரிவித்தனர். அதுபோல, சட்டம், ஒழுங்குப் பிரிவு போலிசார் மேற்கொண்ட சோதனைகள் மூலம் 969 வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, 1,541 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. முகக்கவசம் அணியாததாகக் கூறி 1,346 பேர் மீதும் தனிமனித இடைவெளியைப் பின்பற்றவில்லை எனக் கூறி 83 பேர் மீதும் அரசு அறிவித்த நேரத்தை மீறி கடையைத் திறந்து வைத்திருந்ததாக 64 பேர் மீதும் வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

விசிக பொருளாளர் காலமானார்

சென்னை: விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொருளாளர் முகமது யூசுப் கொவிட்-19 தொற்றால் உயிரிழந்துவிட்டார். சில நாள்களுக்குமுன் கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட, சென்னை மண்ணடியில் உள்ள ஒரு தனியார் மருத்துவ மனையில் யூசுப் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தபோதும் உடல்நிலை மிகவும் மோசமடைய, நேற்று முன்தினம் நள்ளிரவில் திரு யூசுப்பின் உயிர் பிரிந்தது. விசிக தலைவர் தொல்.திருமாவளவன், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட பலரும் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு: இடைக்கால அறிக்கை சமர்ப்பிப்பு

சென்னை: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராகக் கடந்த 2018 மே 22ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பேரணியாகச் சென்றோர்மீது போலிஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 13 பேர் மாண்டனர். அச்சம்பவம் குறித்து விசாரிக்க ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப் பட்டது. பலதரப்பினரிடம் விசாரணை நடத்திய ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன், நேற்று முன்தினம் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலினிடம் இடைக்கால விசாரணை அறிக்கையைச் சமர்ப்பித்தார்.

களத்தில் மருத்துவ மாணவர்கள்

சென்னை: கிருமித்தொற்றால் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளோரின் உடல்நலனைக் கண்காணித்து, அறிகுறிகள் மோசமானால் உதவி வழங்கும் பணிகளில் இறுதியாண்டு மருத்துவப் பட்டப்படிப்பு மாணவர்கள் இன்று முதல் ஈடுபடுத்தப்படவுள்ளனர். இதற்காக, மாதம் ரூ.40,000 ஊதியத்திற்கு 135 மாணவர்களை மூன்று மாத காலத்திற்குச் சென்னை மாநகராட்சி பணியமர்த்தியுள்ளது. மண்டலக் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி, தொலைபேசி வழியாக நோயாளிகளின் உடல்நலன் குறித்து அவர்கள் கேட்டறிவர்.