சென்னை: தமிழ்நாட்டில் இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா தொற்று உச்சத்தை தொட்டு பெரும் அச்சத்தை கிளப்பி வருகிறது.
அந்த மாநிலத்தில் தொடர்ந்து நாளுக்கு நாள் கிருமித்தொற்று கூடி வருவதால் 14 நாட்கள் முழு ஊரடங்கு இப்போது நடப்புக்கு வந்திருக்கிறது. அத்தியாவசிய பணிகளைத் தவிர அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் சனிக்கிழமை ஒரே நாளில் 303 பேர் மரணமடைந்துவிட்டனர். புதிதாக 33,658 பேருக்கு கொவிட்-19 தொற்று உறுதிப்படுத்தப்பட்டதாக அரசாங்கத் தகவல்கள் நேற்று தெரிவித்தன.
அந்த மாநிலத்தில் கொவிட்-19 தொற்று காரணமாக பாதிக்கப்பட்ட மக்களின் மொத்த எண்ணிக்கை 15.7 லட்சமாக உயர்ந்துள்ளது.
இதுவரை 17,359 பேர் மரணமடைந்துவிட்டனர். குணமடைந்த வர்களின் எண்ணிக்கை 13.4 லட்ச மாக உள்ளது. 207,789 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
மாநிலம் முழுவதுமே மருத்துவமனைகளில் போதிய இடம் இல்லாமலும் ஆக்சிஜன் வசதிகள் இல்லாமலும் பெரும் சங்கட நிலை காணப்படுவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், இந்தியாவின் பல மாநிலங்களில் கொவிட்-19 தொற்று நிலவரம் பற்றி பரிசீலித்த மத்திய சுகாதார அமைச்சு, தமிழ்நாடு நிலவரம் கவலை அளிப்பதாக இருக்கிறது என்று குறிப்பிட்டு உள்ளது.
அந்த மாநிலத்தில் கடந்த பல நாட்களாகவே பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கையும் மரண எண்ணிக்கையும் கூடி வருவதை மத்திய அமைச்சு சுட்டிக்காட்டியது.
இவ்வேளையில், நோயாளிகளுடன் மருத்துவமனைக்கு வரும் வேறு யாரையும் அனுமதிக்கக் கூடாது என்று மாநிலத்தில் செயல்படும் கொவிட்-19 மருத்துவமனைகள் அனைத்திற்கும் சுகாதாரத் துறை உத்தரவிட்டு உள்ளது.
தனி வார்டுகளில் நோயாளிகளுடன் உறவினர்களும் தங்குவதால் பெரும் பிரச்சினைகள் ஏற்படுவதாக புகார்கள் கிளம்பியதை அடுத்து அந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டு இருக்கிறது.
கொவிட்-19 நிபந்தனைகளை மக்கள் மீறவில்லை என்பதை உறுதிப்படுத்த அதிகாரிகள் முயற்சிகளை முடுக்கிவிட்டு இருக்கிறார்கள். நிபந்தனைகளை மீறி சாலையில் நடந்துகொண்டதாக வெள்ளிக்கிழமை மட்டும் 21,353 பேர் மீது குற்றப்பதிவு செய்யப்பட்டது.
தலைநகர் உள்ளிட்ட மாநிலத்தின் பல பகுதிகளிலும் பொதுமக்கள் நடமாட்டத்தையும் வாகன போக்குவரத்தையும் ஆளில்லா வானூர்திகள் மூலமாகவும் அதிகாரிகள் கண்காணிக்கிறார்கள்.
திருப்பூர் மாவட்டம் பெருமாநல்லூர் பகுதியில் விதிமீறல்கள் தொடர்வதாக புகார் வந்ததை அடுத்து போலிசார் ஆளில்லா வானூர்திகள் மூலம் அந்தப் பகுதியைக் கண்காணிக்கத் தொடங்கினர். அதை அறிந்ததும் பொதுமக்கள் சாலைகளை விடுத்து அவரவர் வீட்டுக்குள் ஓடிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதற்கிடையே, தமிழகத்தில் பற்றாக்குறையைப் போக்க 2,000 மருத்துவர்கள், 6,000 தாதியர் மற்றும் 2,000 தொழில்நுட்ப பணி யாளர்கள் வேலையில் சேர்க்கப்படு வார்கள் என்று மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சேலத்தில் சனிக்கிழமை செய்தி யாளர்களிடம் தெரிவித்தார்.
தமிழகத்தில் ஒரே நாளில் வரலாறு காணா அளவுக்கு 303 பேர் பலி; 33,658 பேர் பாதிப்பு

