சென்னை: கொவிட்-19 கிருமி தொற்றி மருத்துவமனையில் ஆக்சிஜன் சிகிச்சையில் உள்ள நோயாளிகளுக்குப் பயன்படும் ரெம்டெசிவிர் மருந்து தனியார் மருத்துவமனை மூலமாகவும் இனி விநியோகிக்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.
இந்த மருந்து அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்குப் போதிய அளவில் வழங்கப்பட்டு வருகிறது.
தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு, சென்னை, கோயம்புத்தூர், சேலம், திருச்சி, மதுரை, திருநெல்வேலி ஆகிய இடங்களில் உள்ள விற்பனை மையங்களில் நேரடியாக நோயாளிகளின் குடும்பத்தினர் மூலமாக இந்த மருந்து வழங்கப்பட்டு வருகிறது.
நாளை முதல் தமிழகத்திலுள்ள அனைத்து தனியார் மருத்துவ மனைகளும் ஆக்சிஜன் சிகிச்சை பெற்று வரும் தங்கள் நோயாளிகள் குறித்த விவரங்களோடு, ரெம்டெசி விர் மருந்து தேவை குறித்த தமது கோரிக்கைகளை இணையத்தில் பதிவிடும் வசதி ஏற்படுத்தப்படும்.
இந்தக் கோரிக்கைகளைப் பரிசீலித்து மருந்து ஒதுக்கீடு செய்யப்பட்டபின், அந்த மருத்துவ மனையின் பிரதிநிதிகள் மட்டும், அவர்களுக்கான விற்பனை மையங்களுக்குச் சென்று மருந் தைப் பெற்றுக்கொள்ளலாம்.
இதற்கான இணையத்தளம் குறித்த விவரங்கள் உடனே வெளி யிடப்படும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நேற்று நடந்த ஆலோசனைக் கூட்ட முடிவில் அறிவிக்கப்பட்டது.
அதிக ரெம்டெசிவிர் தேவை என்று மத்திய அரசுக்கு முதல்வர் கோரிக்கை விடுத்தார்.
இதற்கிடையே, ரெம்டெசிவிர் மருந்தைப் பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்க முயன்றதன் தொடர்பில் சென்னையில் இதுவரை 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் இருந்து 234 ரெம்டெசிவிர் மருந்துக் குப்பிகள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் போலிஸ் தெரிவித்தது.

