சென்னை: தமிழ்நாட்டில் கடந்த பத்து நாள்களில் மட்டும் 10,000க்கு மேற்பட்ட சிறார்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது பெற்றோர்களிடையே பேரச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழகத்தில் கடந்த சில நாள்களாக அன்றாட கொரோனா பாதிப்பு 30,000க்கு மேல் பதிவாகி வருகிறது. கடந்த சனிக்கிழமை புதிதாக 33,658 பேரை கொரோனா தொற்றிய நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை பாதிப்பு சற்று குறைந்து 33,181ஆகப் பதிவானது. அதே வேளையில், சனிக்கிழமை 303 பேர் தொற்றால் மாண்டுபோக, அதற்கு மறுநாள் மரண எண்ணிக்கை 311ஆகக் கூடியது.
இந்நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 12 வயதுக்குட்பட்ட 1,264 சிறார்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த பத்து நாள்களில் மட்டும் 10,669 சிறார்களை கொரோனா தொற்றிவிட்டது. குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து குழந்தைகளுக்கு கொரோனா தொற்று மிக எளிதாகப் பரவிவிடுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
தற்பொழுது கண்டறியப்படும் கொரோனா தொற்று பாதிப்புகளில் 40%, குடும்ப அளவிலான கிருமித்தொற்றுக் குழுமங்கள் மூலமாக ஏற்படுவதாகச் சொல்லப்படுகிறது.
கொரோனா இரண்டாவது அலையைக் கட்டுப்படுத்த வரும் 24ஆம் தேதி காலை வரைக்கும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டு, கடுமையான விதிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன.
இந்நிலையில், நேற்றுக் காலையில் இருந்து தமிழகத்தில் மாவட்டங்களுக்கு உள்ளேயும் வெளியேயும் பயணம் செய்ய மின்பதிவு முறை நடப்புக்கு வந்தது.
இதையடுத்து, பல்வேறு இடங்களிலும் மாவட்ட எல்லைகளிலும் போலிசார் சோதனைச் சாவடிகள் அமைத்து தீவிர கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். திருமணம், முக்கிய உறவினரின் இறப்பு, மருத்துவ சிகிச்சை, முதியோர்களுக்கான தேவை போன்ற அத்தியாவசிய பணிகளுக்குச் செல்வோருக்கு மட்டும் அனுமதி வழங்கப்படுகிறது.
மற்ற வாகனங்களில் செல்வோர் தடுத்து நிறுத்தப்பட்டு, அவர்களிடம் மின்பதிவு செய்யப்பட்ட ஆவணங்களைச் சரிபார்த்த பிறகே அனுமதி அளிக்கப்படுகிறது. மின்பதிவு செய்யப்படாத வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்படுகின்றன.
இதனிடையே, தமிழக சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழகத்தில் நேற்று முன்தினம் 159,706 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 33,181 பேருக்குத் தொற்று உறுதியானதை அடுத்து, மொத்த பாதிப்பு 1,598,216ஆக அதிகரித்துள்ளது. மேலும் 21,317 குணமடைந்ததை அடுத்து, மீண்டோர் எண்ணிக்கை 1,361,204ஆக அதிகரித்தது," எனக் கூறப்பட்டுள்ளது.

