சென்னை: கொரோனா தடுப்பூசி போட விண்ணப்பித்தால் வீட்டுக்கே நேரில் வந்து தடுப்பூசி போடப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்திருக்கிறது.
சென்னை மாநகரில் நாள்தோறும் பல ஆயிரக்கணக்கான மக்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுகின்றனர். கடந்த 24 மணி நேரத்தில் அங்கு 6,247 பேரைக் கிருமி தொற்றிவிட்டது.
கொரோனா நோயாளிகள் அதிகரித்தவண்ணம் இருப்பதால் மருத்துவமனைகளும் நிரம்பி வழிகின்றன. இதனால் பலரும் வீடுகளிலேயே தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டிய நிலை ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் குடியிருப்பவர்கள் விண்ணப்பித்தால் வீட்டுக்கே வந்து தடுப்பூசி போடப்படும் என மாநகராட்சி அறிவித்துள்ளது. இந்த வகையில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு மட்டும் தடுப்பூசி போடப்படும்.
தடுப்பூசி பெறத் தகுதியான 30 பேருக்கு மேல் இருந்தால் குறிப்பிட்ட குடியிருப்பு அல்லது நிறுவனத்திற்கே வந்து சிறப்புத் தடுப்பூசி முகாம் போடப்படும்.
இதற்காக விண்ணப்பிப்போர் மற்றும் நிறுவனங்கள், தங்கள் பெயர், முகவரி, மண்டலம், வார்டு குறித்த விவரங்களுடன் இணையம் வழியாக மாநகராட்சிக்கு விண்ணப்பிக்கலாம் அல்லது மாநகராட்சி மண்டல அதிகாரிகளைத் தொடர்புகொள்ளலாம்.

