கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளைப் பாதுகாக்க மையம்

கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளைப் பாதுகாக்க மையம்

1 mins read
4728edba-c122-4980-b584-68ce75bcb882
-

திருநெல்வேலி: கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளைப் பாதுகாத்து, பராமரிக்கும் நோக்கத்தில் தமிழ் நாட்டிலேயே முதன்முறையாக திருநெல்வேலியில் குழந்தைகள் பாதுகாப்பு மையம் ஒன்று செயல்படத் தொடங்கியுள்ளது. பெற்றோர்கள் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டு, அதனால் பாதிக்கப்படாத அவர்களின் குழந்தைகளை திருநெல்வேலி சந்திப்பு மையத்தில் இயங்கி வரும் ஒரு தனியார் குழந்தைகள் பாதுகாப்பு மையத்தில் வைத்துப் பராமரிக்க மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்துள்ளார். தமிழக தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று அந்த மையத்தைப் பார்வையிட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "நெல்லை மாவட்டத்தில் தொற்றைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறோம். தொழில் நுட்பக் கோளாறு சரிசெய்யப் பட்டு ஸ்டெர்லைட் ஆலை இயங்கத் தொடங்கியுள்ளது. கூடிய விரைவில் அங்கு ஆக்சிஜன் உற்பத்தி தொடங்கப் படும். மேலும் ஒடிசாவில் இருந்து தூத்துக்குடிக்கு ஐந்து சரக்கு வாகனங்களில் திரவ ஆக்சிஜன் கொண்டுவரப் படுகிறது," என்று சொன்னார்.