செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
a4a6d801-9192-4b72-a740-ccc31c080785
-

அதிமுக, சன் டிவி, ரஜினி நிதியுதவி

சென்னை: கொரோனா நோய்த் தடுப்பு, நிவாரணப் பணிகளுக்காக முதல்வரின் பொது நிவாரண நிதிக்குப் பல தரப்பினரும் நிதியுதவி அளித்து வருகின்றனர். அந்த வகையில், சன் தொலைக்காட்சி குழுமத் தலைவர் கலாநிதி மாறன், முதல்வர் ஸ்டாலினைச் சந்தித்து ரூ.10 கோடி நிதி வழங்கினார். அதிமுக சார்பில் ரூ.1 கோடி வழங்கப் பட்டுள்ளது. மேலும், அதிமுக சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத ஊதியத்தை முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கவுள்ளனர். நடிகர் ரஜினிகாந்த் தன் பங்காக ரூ.50 லட்சம் வழங்கியிருக்கிறார்.

நிவாரண நிதி கொள்ளைபோனது

சென்னை: தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு கொரோனா நிவாரண நிதியாக ரூ.4,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டு, முதற்கட்டமாக ரூ.2,000 வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டை காவேரி நகர் ரேஷன் கடையில் நிவாரண நிதி வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த ரூ.7.36 லட்சம் கொள்ளைபோய்விட்டது. இதுகுறித்து கடையின் மேற்பார்வையாளர் அளித்த புகாரின் தொடர்பில் போலிசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரூ.19.24 கோடி அபராதம் வசூலிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 38 நாள்களில் முகக்கவசம் அணியாமல் வெளியில் சென்றோரிடம் இருந்து போலிசார் ரூ.19.24 கோடி அபராதம் வசூலித்துள்ளனர். இதே கால கட்டத்தில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்காத 33,566 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, ரூ.1.67 கோடி அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.

கோவில் வாசலில் திருமணங்கள்

மதுரை: கொரோனா இரண்டாவது அலை ஊரடங்கால் கோவில்களிலும் திருமண மண்டபங்களிலும் அதிகமானோர் திரண்டு, திருமணம் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. முன்னரே நிச்சயிக்கப்பட்ட திருமணங்களை எளிமையாக நடத்திக்கொள்ளலாம். இதையடுத்து, மாநிலம் முழுவதும் கோவில் வாசலில் திருமணங்கள் எளிமையாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையில், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் திருக்கோவில் மற்றும் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோவில் வாசல்களில் மணமகன், மணமகள் உட்பட 20 பேர் கொண்ட குழுக்களாக வந்து, நேற்று மணமுடித்துச் சென்றனர்.

கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்தம்

சென்னை: மறுஉத்தரவு வரும்வரை தமிழகத்தில் கீழமை நீதிமன்றப் பணிகள் நிறுத்திவைக்கப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது. நெல்லை தலைமைக் குற்றவியல் நீதிபதி நீஷ் கிருமித்தொற்றால் மரணமடைந்ததை அடுத்து, இந்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.

துளசி அய்யா வாண்டையார் மறைவு

தஞ்சாவூர்: காங்கிரஸ் கட்சியின் முன்னாள் எம்.பி.யும் முன்னாள் முதல்வர் காமராஜரின் நெருங்கிய நண்பருமான பூண்டி துளசி அய்யா வாண்டையார் நேற்று காலமானார். அவருக்கு வயது 94. தஞ்சையில் பூண்டி புஷ்பம் கல்லூரியைத் தொடங்கி, ஆயிரக்கணக்கான மாணவர்கள் பட்டம் பெறச் செய்த பெருமை இவரைச் சேரும். அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.