சென்னை: கொரோனா கிருமி பாதிப்பு காரணமாக உயிரிழப்ப வர்களின் விவரங்களைத் துல்லிய மாகவும் வெளிப்படையாகவும் வெளியிட வேண்டும். இதில் எந்த ஒரு ஒளிவு மறைவும் இருக்கக் கூடாது என்று மாநில அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அறிவுறுத்தி உள்ளனர்.
"தமிழகத்தில் புதிய அரசு கடந்த 7ஆம் தேதிதான் பதவி ஏற்றுள்ளது. இந்தக் கிருமி பாதிப்பு நீண்ட நாள்களாகவே உலகெங்கும் தொடரும் ஒன்று.
"புதிய அரசு பொறுப்புக்கு வந்து சில நாள்களே ஆவதால், கொரோனா மரணங்களுக்கு அரசு மீது யாரும் பழி போடமாட்டார்கள்.
"எனவே, இதனால் ஏற்படும் உயிர்ப்பலியைத் அரசு மறைக்கத் தேவை இல்லை," என்று நீதிபதிகள் கூறினர்.
தமிழகத்தில் தடுப்பூசிகள், மருந்துகள் பற்றாக்குறை தொடர் பான வழக்கு ஒன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சஞ்சீவ் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி ஆகி யோர் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வழக்கறிஞர் நவீன் மூர்த்தி முன்னிலையாகி, "தமிழகத்தில் கொரோனாவால் ஏற்படும் உயிர்ப்பலிகள் குறைத்துக் காட்டப்படுகின்றன.
"அத்துடன், 'சாதாரண சாவு' என்றும் சான்றிதழ் தரப்படுகிறது.
"அண்மையில், கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 47 பேர் பலியாகிய நிலையில், கொரோனா வால் ஏழு பேர் மட்டுமே மரணம் அடைந்ததாகவும் மற்ற 40 பேர் வேறு நோய்களால் மரணம் அடைந்ததாகவும் அரசு அறிவித்தது.
"இதனால் தமிழகத்துக்கு கிடைக்கவேண்டிய தடுப்பூசிகள், மருந்துகள், ஆக்சிஜன் உள்ளிட்ட வற்றை பிற மாநிலங்களுக்கு மத்திய அரசு அனுப்பும் நிலைமை ஏற்பட்டுள்ளது," என்றார்.
தமிழக அரசின் தரப்பில் முன்னி லையான தலைமை வழக்குரைஞர் ஆர்.சண்முகசுந்தரம், "இதுகுறித்து அரசு அதிகாரிகளிடம் விவரம் கேட்டு கூறுகிறேன்," என்றார்.
நீதிபதிகள் தங்கள் உத்தரவில், "மரணங்கள், பாதிப்புகள் குறித்த உண்மையான விவரங்களை வெளியிட்டால்தான் எதிர்காலத்தில் ஆக்சிஜன், தடுப்பூசி, மருந்துகள் போன்ற உதவிகளைப் பெறுவதற்கு வசதியாக இருக்கும். அத்துடன், கொரோனாவால் பலியானவா்களின் உடல்களைக் கண்ணியமாகக் கையாள வேண்டும்," என்றனர்.

