செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
296c542f-1941-4bfe-ab7a-50a12d4181e1
-

மேட்டூர் அனல் மின்நிலையத்தில் பயங்கர தீ விபத்து

சேலம்: சேலம் மாவட்டம், மேட்டூர் அனல் மின் நிலையத்தில் நிலக்கரி கொண்டு செல்லும் கன்வேயர் பெல்ட் பகுதி நேற்று அதிகாலை உராய்வு காரணமாக மளமளவென தீ பிடித்து எரிந்தது. இதன் காரணமாக 840 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து, வரும் நாட்களில் அனல்மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி தகவலறிந்த மேட்டூர் அனல்மின் நிலைய தீயணைப்புப் படையினரும் ஊழியர்களும் சுமார் ஒருமணி நேரம் போராடி தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் பல லட்ச ரூபாய் மதிப்பிலான பொருள்கள் சேதம் அடைந்ததாக அனல்மின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ரெம்டெசிவிர் மருந்தைப் பெற இணையத்தில் விண்ணப்பம்

சென்னை: தமிழகத்தில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெறுவதற்கு நீண்ட வரிசையில் காத்திருப்பதற்கு பதிலாக இனி இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து பெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவப் பணிகள் கழகம் சார்பில் தொடங்கப்பட்டுள்ள tnmsc.tn.gov.in என்ற இணையத்தளம் மூலம் விண்ணப்பித்து தனியார் மருத்துவமனைகளில் ரெம்டெசிவிர் மருந்தைப் பெற்றுக்கொள்ளலாம்.

மருந்தைப் பெறுவதற்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்கள், மருத்துவமனை விவரம், தொற்று அறிகுறி, இணைநோய் உள்ளிட்ட விவரங்களைப் பதிவு செய்ய வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக தலைவர் எல். முருகனின் மகனுக்கு தொற்று பாதிப்பு

சென்னை: பாஜக மாநில தலைவர் எல்.முருகனின் இளைய மகன் இந்திரஜித்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை அடுத்து அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். அவரது மனைவி, மூத்த மகனுக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆதரவற்ற குழந்தைகளுக்கு காப்பகத்திலேயே சிகிச்சை

சென்னை: சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் மனவளர்ச்சி குன்றிய, மாற்றுத்திறனாளி குழந்தைகள் 74 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானதாக தகவல் வெளியானதை அடுத்து, மனநலம் பாதிக்கப்பட்ட அந்தக் குழந்தைகளுக்கு எப்படி சிகிச்சை அளிக்கப்படும் என்பது குறித்து சென்னை கீழ்ப்பாக்கத்தில் மாநகராட்சி ஆணையர் ககன்தீப் பேடி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது பேசிய அவர், குழந்தை களுக்கு காப்பகத்திலேயே சிகிச்சை அளிக்கப்படும் என்றும் உடல்நலத்தை கண்காணிக்க மருத்துவக் குழுவினர் அவர்களுடன் இருப்பார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.