இறையன்பு: இலவச சேவைக்கு லஞ்சம் பெற்றால் பணி நீக்கம்

இறையன்பு: இலவச சேவைக்கு லஞ்சம் பெற்றால் பணி நீக்கம்

2 mins read
96000a4d-900d-427b-9bab-a85de7c8dec9
தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு. படம்: இணையம் -

சென்னை: கொரோனா கிருமிப் பரவல் காரணமாக மாநில மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வரும் இந்தக் காலக்கட்டத்தில், நீதி நெறிமுறைக்குப் புறம்பாக நடந்து கொள்ளும் ஊழியா்கள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என தலைமைச் செயலாளா் வெ.இறையன்பு எச்சரித்துள்ளாா்.

அரசின் இலவச சேவைகளை வழங்குவதற்குக் கூட பொதுமக்களிடம் இருந்து கையூட்டு பெறுவது; மருத்துவமனைகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது, மருந்துகளைக் கூடுதல் விலைக்கு விற்பது போன்ற மனித நேயமற்ற செயல்களில் ஈடுபடுவோர் மீது குற்றவியல் நடவடிக்கைகள் பாயும் என்றும் அவர் கூறியுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பாக நடந்து கொள்பவர்கள் குறித்து முதல்வரின் கவனத்துக்கு புகார்கள் வந்துள்ளதாகவும் அத்தகையோர் மீது கடும் நடவடிக்கைகளை எடுக்கும்படி முதல்வர் உத்தரவிட்டுள்ளதாகவும் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

தவறு செய்யும் அலுவலர்களைத் தயங்காமல் பணிநீக்கம் செய்யவும் அவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கைகளை எடுக்கவும் சம்பந்தப்பட்ட அரசுத் துறை செயலர்கள், காவல்துறையின் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

"எந்த நிலையில் ஒரு அலுவலர் இருந்தாலும் அல்லது எந்த ஒரு நிறுவனமாக இருந்தாலும் புகாா்கள் தொடர்பில் கடும் நடவடிக்கைகளை எடுக்கவும் தவறு நடக்கும் இடங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

"கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த நமது மாநிலத்தில் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவாமல் தடுத்தல், தொற்றால் பாதிக்கப்பட்டவா்களைக் காத்தல் ஆகிய இரண்டு முக்கிய இலக்குகளோடு அரசு செயல்பட்டு வருகிறது.

"மக்களின் உயிா் காக்கும் பணியில் முழு முனைப்போடு ஈடுபட்டு வரும் அரசுக்கு, தவறு செய்யும் ஒரு சிலரால் அவப்பெயா் ஏற்படாமல் கவனமாகவும் கண்ணியமாகவும் செயல்பட வேண்டும்," என்று வெ.இறையன்பு கேட்டுக்கொண்டுள்ளாா்.