முதல்வரின் நிவாரண நிதிக்கு
கைகொடுத்து உதவிய முதியவர்கள்
காஞ்சிபுரம்: தமிழக அரசின் கிருமித் தடுப்பு நடவடிக்கை களுக்குக் கைகொடுக்கும் வகையில் அைனத்து மக்களும் நிவாரண நிதி வழங்கவேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் வேண்டுகோள் விடுத்ததைத் தொடர்ந்து, மக்கள் நிதியுதவியைக் குவித்து வருகின்றனர்.
காஞ்சிபுரத்தைச் சேர்ந்த சிவஞானம் என்ற முதியவர் தனது 45 ஆண்டுகால சேமிப்பாக இருந்த ரூ.1 லட்சம் பணத்தை இம்மாவட்ட ஆட்சியர் மகேஸ்வரியிடம் நேரில் வழங்கினார். இதேபோல், இந்திய மருத்துவ முறையில் சிகிச்சை அளித்து வரும் கண்ணப்பர் என்ற முதியவரும் ஒரு லட்சம் ரூபாயை ஆட்சியர் மகேஸ்வரியிடம் வழங்கினார். முதுமையிலும் தாராள மனதுடன் நிதியுதவி செய்துள்ள முதியவர்களை ஆட்சியர் பாராட்டினார்.
17,000 பேர் ரூ.69 கோடி நிதியுதவி
சென்னை: கொரோனா கிருமித் தடுப்பு நடவடிக்கையின் பொருட்டு முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு பெறப்படும் நிதி குறித்தும், இந்த நிதியில் செய்த செலவுகள் குறித்தும் வெளிப்படையாக அறிவிப்பு வெளியிடப்படும் என்று ஏற்கெனவே முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார்.
அதன்படி, பல்வேறு தரப்பினரிடம் இருந்து பெறப்படும் நிதிக்கு ரசீது வழங்குவதுடன் மாநில அரசின் இணையத் தளத்திலும் இவ்விவரம் பதிவேற்றம் செய்யப்படுகிறது.
இந்நிலையில், மே 17ஆம் தேதி வரை 17,000க்கும் அதிகமானோர் 69 கோடி ரூபாய் நிதி வழங்கியுள்ளனர். இணையவழியில் 29.44 கோடி ரூபாயும் நேரடியாக 39.56 கோடி ரூபாயும் வழங்கப்பட்டுள்ளது.
இத்தொகையில் ரூ.25 கோடிக்கு ரெம்டெசிவிர் மருந்து களும் மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனைத் தருவிக்க ரூ.25 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்தப் பேரிடர் காலத்தில் பெறப்படும் இந்த நன்கொடை கொரோனா நிவாரணத்துக்காக மட்டுமே பயன்படுத்தப்படும் என்ற உறுதியையும் அரசு வழங்கி இருந்தது.
மருத்துவமனையில் விஜயகாந்த்
சென்னை: தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று அதிகாலை 3 மணி அளவில் அவருக்கு திடீரென மூச்சுத் திணறல் ஏற்பட்டதை அடுத்து உடனடியாக சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவர்கள் விஜயகாந்துக்கு தொடர் சிகிச்சை அளித்து வரும் நிலையில், விஜயகாந்த் உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளதாக தேமுதிக தலைமை விளக்கம் அளித்துள்ளது.
"சிகிச்சை முடிந்து ஓரிரு நாள்களில் விஜயகாந்த் வீடு திரும்புவார். எனவே பொய்யான வதந்திகளை நம்ப வேண்டாம்," என்றும் அது கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையில் மீண்டும் தொடங்கியது ஆக்சிஜன் உற்பத்தி
தூத்துக்குடி: தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக கடந்த சில நாள்களாக நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஆக்சிஜன் உற்பத்தி மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து, நேற்று (புதன்கிழமை) முதல் ஆக்சிஜன் டேங்கர் லாரிகளில் ஏற்றப்பட்டு மருத்துவமனைகளுக்கு அனுப்பிவைக்கப்படும் என்று ஊடகத் தகவல்கள் குறிப்பிட்டிருந்தன.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் வெளியே சுற்றினால் அபராதம்
சென்னை: சென்னையில் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கும் கொரோனா நோயாளிகளும் அவர்களது குடும்பத்தினரும் தங்களது பொறுப்பை உணர்ந்து வீட்டிலேயே இருக்கவேண்டும். அதையும் மீறி வெளியே சுற்றித்திரிவது தெரியவந்தால் ரூ.2,000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி எச்சரித்துள்ளார்.
இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், "வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள கொரோனா நோயாளிகள் வெளியே சுற்றுவதால்தான் பாதிப்பு அதிகம் ஏற்படுகிறது. இரண்டாவது முறையாக இந்தக் கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் கொரோனா சிகிச்சை முகாமுக்கு அழைத்துச் செல்லப்படுவார்கள். அதேநேரத்தில் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளவர்களுக்குத் தேவையான பொருள்கள் கிடைப்பதற்கும் மாநகராட்சி ஏற்பாடு செய்யும்," என்றும் கூறப்பட்டுள்ளது.

