சென்னை: தமிழகத்தில் 18 முதல் 45 வயது உடையவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடும் பணி இன்று முதல் தொடங்கும் என்று மருத்துவம், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இந்த வயதினரில் குறிப்பாக, ஆட்டோ ஓட்டுநர்கள், தொழிலாளர்கள், மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.
கடந்த மார்ச் 1 முதல் 55 வயதுக்கு மேலானவர்களுக்கும் ஏப்ரல் 1 முதல் 45 வயதிற்கு மேலானவர்களுக்கும் தடுப்பூசி போடும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்நிலையில், இன்று முதல் 18 வயதுக்கு மேற்பட்ேடாருக்கு இத் தடுப்பூசி போடும் பணியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருப்பூரில் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் சொன்னார்.
சுகாதாரத் துறை சார்பில் ரூ.46 கோடி செலவில், ஒன்பது லட்சம் தடுப்பூசிகள் தமிழகம் வந்து சேர்ந்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
சென்னை தேனாம்பேட்டையில் கொரோனா பாதிப்பால் மூச்சு விட சிரமப்படுபவர்களுக்கு உதவும் வகையில் நடமாடும் ஆக்சிஜன் வாகனங்களைத் தொடங்கி வைத்த அமைச்சர், அதன்பின்னர் செய்தி யாளர்களிடம் பேசினார்.
கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு மட்டுமே ஒரே தீர்வாக உள்ளதாகக் கூறியவர், "ஊரடங்கு நீடிக்குமா என்பது போகப் போகத்தான் தெரியும்," என்றார்.
"ஊரடங்குக்கு முன்னால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை வேகமாக உயர்ந்தது. ஆனால், ஊரடங்குக்குப் பிறகு தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை 33,000 என்ற அளவிலேயே தொடர்கிறது.
"சென்னையில் இந்தப் பாதிப்பு தொடர்ந்து குறைந்து வருகிறது.கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் முறையில், சென்னையைப் போலவே மற்ற மாவட்டங்களிலும் பின்பற்றவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
"அதேபோல் ஊரடங்கை இன்னும் கடுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாவட்டங்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
"பொதுமக்கள் அவசிய தேவைகளுக்கு மட்டுமே வெளியே வரவேண்டும். தேவையின்றி வெளியே சுற்றுவதைத் தவிர்க்கவேண்டும்.
ஊரடங்கு கடுமையாக இருப்பி னும் அனைவரும் நலமாக வாழ இதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும் என்று அவர் கூறினார்.
ஊரடங்கு கடுமையாகவே
இருக்கும். இது ஒரு கசப்பு மருந்துதான். வேறு வழியில்லை. அனைவரும் நலமாக வாழ இதை ஏற்றுக்கொண்டு பக்குவப்பட வேண்டும்.
அமைச்சர் மா.சுப்பிரமணியன்