ஒரே நாளில் 34,875 பேரை கிருமி தொற்றியது; 365 பேர் பலியாகினர்
சென்னை: தமிழகத்தில் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை மீண்டும் அதிகரிக்கத் துவங்கியிருப்பது நிபுணர்கள் மத்தியில் கவலையை ஏற்படுத்தி உள்ளது.
நேற்று முன்தினம் ஒரே நாளில் மாநிலம் முழுவதும் 34,875 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. மேலும் அன்றைய தினம் 365 பேர் கிருமித் தொற்றுக்குப் பலியாகி விட்டனர்.
இதன்மூலம் இந்தியாவில் ஒரேநாளில் அதிகமானோர் பாதிக்கப்படும் பட்டியலில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. நேற்று முன்தினம் மகாராஷ்டிராவில் 34,031 பேரும் கர்நாடகாவில் 34,281 பேரும் கேரளாவில் 32,762 பேரும் கிருமித் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர்.
தமிழகத்தின் 37 மாவட்டங்களிலும் குறைந்தபட்சம் இருநூறுக்கும் மேற்பட்டவர்களுக்கு புதிதாக கிருமி தொற்றியது உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னையில் ஒரே நாளில் 6,267 பேரை கிருமி தொற்றியுள்ளது. சென்னையில் மட்டும் நேற்று முன்தினம் 91 பேர் உயிரிழந்துவிட்டனர். அடுத்த இடத்தில் உள்ள கோவையில் 3,250 பேருக்கு புதிதாக கிருமி தொற்றியுள்ளது. அதிகம் பாதித்த மாவட்டங்களின் பட்டியலில் செங்கல்பட்டு (2,275), திருவள்ளூர் (1,778), திருப்பூர் (1,573), திருச்சி (1,459), ஈரோடு (1,362), மதுரை (1,156)ஆகிய மாவட்டங்கள் அடுத்தடுத்து இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் 15 மாவட்டங்களில் நேற்று முன்தினம் ஐநூறுக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
இதேவேளையில் கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், சிவகங்கை ஆகிய மூன்று மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் ஓர் இறப்புச் சம்பவமேனும் பதிவாகி உள்ளது.
செங்கல்பட்டில் 46 பேரும், கன்னியாகுமரியில் 23 பேரும் உயிரிழந்து விட்டனர். கோவையில் 17, மதுரையில் 14, திருச்சியில் 13 என இறப்புச் சம்பவங்கள் பதிவாகி உள்ளன. தமிழகத்தில் தற்போது 253,000 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை கொரோனா தொற்றால் 18,734 பேர் பலியாகிவிட்டனர்.
இதற்கிடையே மதுரை மாவட்டத்தில் கொரோனா நோயாளிகளைத் தகனம் செய்ய மூன்று புதிய மின்தகன மேடைகள் அமைக்கப்பட உள்ளன.
மதுரையில் உள்ள அரசு, தனியார் மருத்துவமனைகளில் உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் சிவகங்கை, விருதுநகர், இராமநாதபுரம் உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் கொரோனா சிகிச்சைக்காக வருகின்றனர்.
சிகிச்சை பலனின்றி உயிரிழப்போரின் உடல்களை குடும்பத்தாரும் உறவினர்களும் மதுரையில் உள்ள சுடுகாட்டிலேயே தகனம் செய்கின்றனர்.
மதுரையில் 11 இடங்களில் மயானங்கள் உள்ளபோதிலும் மூன்று இடங்களில் மட்டுமே நவீன அம்சங்களுடன் கூடிய மின்தகன மேடைகள் உள்ளன.
மின்தகன மேடையில் ஒரு பிணத்தை எரிக்க குறைந்தபட்சம் ஒரு மணி நேரமாகும். அதனால், தினமும் 50 சடலங்கள் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கூடுதலாக மூன்று மின்தகன மேடைகள் அமைக்கும் பணி தொடங்கி உள்ளது.

