சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளைப் பராமரிக்க மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏழு பேர் கொண்ட பணிக்குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில், கொரோனா கிருமி குழந்தைகளைப் பாதிக்கிறது என்ற தகவல் மிகுந்த கவலை அளிப்பதாக அரசு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமிழக அரசு குழந்தைகளின் பராமரிப்பு, பாதுகாப்பில் அதிக அக்கறை கொண்டுள்ளதாகவும் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு கிடைக்கும் உதவிகள் குறித்து பொதுமக்களிடையே தேவையான விழிப்புணர்வை ஏற்படுத்தி உள்ளதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் குழந்தைகளை பராமரிப்பதற்கும் அவர்களுக்குத் தேவையான சேவைகளை வழங்குவதற்கும் ஏதுவாக அனைத்து மாவட்டங்களிலும் அந்தந்த மாவட்ட ஆட்சியர் தலைமையின் கீழ் 7 உறுப்பினர்களைக் கொண்ட மாவட்ட அளவிலான பணிக்குழு அமைக்கப்பட்டு உள்ளது.
இந்தப் பணிக்குழு பெற்றோரை இழந்த அல்லது கவனிப்பு, பாதுகாப்பு தேவைப்படும் குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களை குழந்தைகள் நலக் குழுவின் முன் முன்னிலைப்படுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் நல குழுவானது பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மறுவாழ்வு வழங்குதல் அல்லது குழந்தைகள் இல்லங்களில் சேர்த்தல் குறித்து முடிவு செய்யும் எனவும் அரசு கூறியுள்ளது.
குழந்தைகளுக்கு உளவியல் சார்ந்த ஆலோசனை வழங்கப்படும் என்றும் பாதிக்கப்பட்ட குழந்தைகளை சிகிச்சை மையங்களுக்கு சரியான நேரத்தில் பரிந்துரைத்தல், ஊட்டச்சத்து வழங்குவதை உறுதி செய்தல் ஆகிய நடவடிக்கைகளையும் மாவட்ட பணிக்குழு மேற்கொள்ளும் என்றும் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

