சென்னை: வட இந்திய மாநிலங்களை அச்சுறுத்தி வரும் கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு தமிழகத்திலும் பரவத் தொடங்கியுள்ளது.
கோவில்பட்டி அருகே இந்நோய் தாக்குதலுக்கு ஆளான பட்டறை உரிமையாளர் உயிரிழந்துள்ளார்.
கொரோனா கிருமியின் பிடியில் இருந்து மீண்ட பிறகும் சிலருக்கு கறுப்பு பூஞ்சை நோய் ஏற்படுகிறது. இதனால் சிலர் உயிரிழக்கவும் நேரிடுகிறது.
அண்மைய சில தினங்களாக கர்நாடகா, மஹாராஷ்டிரா, தெலுங்கானா, ஹரியானா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தரகாண்ட், பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் பலரை கறுப்பு பூஞ்சை நோய் தாக்கி உள்ளது.
மகாராஷ்டிராவில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோய் தொடர்பான மரண எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கறுப்பு பூஞ்சை நோய்க்கு தமிழகத்தில் ஒருவர் பலியாகி உள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள நரசிம்மபுரம் கிராமத்தைச் சேர்ந்த 57 வயது பட்டறை உரிமையாளருக்கு அண்மையில் கறுப்பு பூஞ்சை நோய் பாதிப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே கொரோனா தொற்றுக்காகவும் அவர் சிகிச்சை பெற்று வந்தார்.
இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் உயிரிழந்தார்.
இதற்கிடையே, சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட ஐந்து நீரிழிவு நோயாளிகள் கறுப்பு பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தினத்தந்தி வெளியிட்ட செய்தி தெரிவிக்கிறது.
மதுரையில் 50 பேருக்கு கறுப்பு பூஞ்சை பாதிப்பு இருப்பதாகவும் அவர்கள் அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்படுவதாகவும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில், கறுப்பு பூஞ்சை நோயை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் இருப்பதாக அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். சிகிச்சைக்குத் தேவையான மருந்துகள் கையிருப்பில் உள்ளதாகவும் அவர் கூறிஉள்ளார்.

