சென்னை: கொரோனா பெருந்தொற்றின் இரண்டாவது அலையானது மக்களின் உடல் நலனையும் வாழ்வாதாரத்தையும் நாட்டின் பொருளாதாரத்தையும் பெரும் பாதிப்புக்குள்ளாக்கி உள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தொழில்துறை நிறுவனங்களுடன் அவர் நேற்று காணொளி மூலம் கலந்தாலோசனை மேற்கொண்டார்.
அப்போது பேசிய அவர், கொரோனா தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு என்பது ஒரு தீர்வல்ல என்றார்.
ஊரடங்கு என்பது பலரது வாழ்வையும் தொழிலையும் பாதித்துவிடும் என்று குறிப்பிட்ட அவர், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்த திமுக அரசு பொறுப்பேற்றவுடன் பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்து போர்க்கால அடிப்படையில் மக்களைக் காக்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்தார்.
அரசு அலுவலர்கள், முன்களப் பணியாளர்கள் என அனைவரும் இரவு பகல் பாராது இப்பணியில் முழு முனைப்புடன் செயல்பட்டு வருவதாகவும் அப்படிப்பட்ட நடவடிக்கைகளில் ஒன்றுதான் ஊரடங்கு என்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்்.
"தொழில் நிறுவனங்கள் எவ்வித சிரமமின்றி இயங்க ஏதுவாக அவற்றின் தொழிலாளர்கள், பணியாளர்கள் ஆகியோர் பணிக்குச் சென்றுவர 'இ-பதிவு' முறையை நடைமுறைப்படுத்தி இருக்கிறோம்.
"உங்களுக்கு ஏற்படக்கூடிய சிரமங்களைக் களைவதற்காக 24 மணி நேரமும் செயல்படக்கூடிய உதவி மைய சேவையும் தொழில் வழிகாட்டி மையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது," என்றார் மு.க.ஸ்டாலின்.
மேலும், 'சிப்காட்' நிறுவனம் இதுவரை 500 உயிர்வாயுத் தோம்புகளை சிங்கப்பூரிலிருந்து விமானம் மூலமாகக் கொண்டு வந்திருப்பதாகவும் மேலும் 1,650 தோம்புகள் சிங்கப்பூரிலிருந்து கப்பல் வழியாகக் கொண்டு வரப்படுவதாகவும் முதல்வர் மு.க.ஸ்டாலின் மேலும் தெரிவித்தார்.

