செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
70c0194c-fd5f-477b-8dc8-fa6cef4ba781
-

பேரறிவாளனுக்கு 30 நாள் சிறை விடுப்பு

சென்னை: பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் முன்வைத்த கோரிக்கையை தமிழக அரசு ஏற்றுக்கொண்டுள்ளது. இதையடுத்து பேரறிவாளனுக்கு 30 நாள் சாதாரண விடுப்பு வழங்கி முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளில் ஒருவரான பேரறிவாளனின் உடல்நிலையைக் கவனத்தில் கொண்டு அவருக்கு அவ்வப்போது சிறை விடுப்பு (பரோல்) வழங்கப்படுகிறது. மேலும் அவரது தந்தையின் உடல்நலமும் பாதிக்கப்பட்டதை காரணமாக முன்வைத்து அவருக்கு முன்பு விடுப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் அவரது தாய் அற்புதம்மாள் புதிய முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், தனது மகன் பேரறிவாளனுக்கு விடுப்பளிக்கக் கேட்டு கோரிக்கை விடுத்தார். அதை ஏற்றுக்கொண்டு மருத்துவ காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்கப்பட்டது.

வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் மருத்துவப் பணி தொடங்க அனுமதி

சென்னை: வெளிநாடுகளில் மருத்துவப் படிப்பை முடித்துள்ள 500 பேர் மருத்துவப் பணியைத் தொடங்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழகத்தில் பயிற்சி பெறும் வகையில் ஓராண்டு பணிபுரிந்த பிறகே மருத்துவப் பணியைத் தொடங்க முடியும் என்ற விதிமுறை உள்ளது. தற்போது அந்த விதிமுறையைத் தளர்த்தி வெளிநாட்டில் மருத்துவம் படித்த 500 பேர் தமிழகத்தில் மருத்துவப் பணியைத் தொடங்க உத்தரவிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே வெளிநாட்டில் மருத்துவம் படித்தவர்கள் பயிற்சிக் காலத்தின்போது 5 லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்தவேண்டும் என்ற விதிமுறையும் தளர்த்தப்பட்டுள்ளது.

பரிசோதனைக் கட்டணம் குறைப்பு

சென்னை: தனியார் மருத்துவமனைகளில் கொரோனா பரிசோதனைக்கு அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக அண்மையில் புகார்கள் எழுந்தன. இந்நிலையில் அந்தக் கட்டணத்தை ரூ.1,800 என்பதிலிருந்து ரூ.900 ஆக குறைத்துள்ளது தமிழக அரசு. மேலும் முதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டப் பயனாளிகளுக்கான பரிசோதனைக் கட்டணம் ரூ.800லிருந்து ரூ.550ஆக குறைக்கப்பட்டுள்ளது.

'ரெம்டெசிவிர்' மருந்துக்காக மதுரையில் முற்றுகைப் போராட்டம்

மதுரை: ரெம்டெசிவிர் மருந்தை விநியோகிக்கக் கோரி மதுரை ஆட்சியர் அலுவலகம் முன்பு கொரோனா நோயாளிகளின் உறவினர்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். அம்மருந்து கள்ளச்சந்தையில் விற்கப்பட்டதால் அதன் விநியோகத்தை அரசு நிறுத்தி வைத்தது. இந்நிலையில் தனியார் மருத்துவமனைகளுக்கு மட்டும் அம்மருந்து நேரடியாக விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் அனைவருக்கும் மருந்து விநியோகிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தி பொதுமக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் கொரோனா மருந்துகள் கள்ளச்சந்தையில் விற்கப்படுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

'யுடியூப்' காணொளியைப் பார்த்து சாராயம் காய்ச்சியவர் கைது

நாகை: 'யுடியூப்' தளத்தில் உள்ள காணொளிப் பதிவைப் பார்த்து சாராயம் காய்ச்சிய ஒருவர் கைதானார். வேதாரண்யம் அருகே உள்ள புஷ்பவனத்தைச் சேர்ந்தவர் காஞ்சிநாதன். இவர் தன் வீட்டில் சாராயம் பதுக்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து போலிசார் அதிரடி சோதனை நடவடிக்கை மேற்கொண்டனர். அப்போது அங்கு பதுக்கி வைக்கப்பட்டிருந்த 200 லிட்டர் எரிசாராயம் சிக்கியது. இதையடுத்து நடத்தப்பட்ட தீவிர விசாரணையின்போது 'யுடியூப்' தளத்தில் இடம்பெற்றுள்ள காணொளிப் பதிவைப் பார்த்து எப்படி சாராயம் காய்ச்ச வேண்டும் என்பதை தாம் தெரிந்துகொண்டதாகக் கூறியுள்ளார் காஞ்சிநாதன்.