தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பாக ஆலோசனை
சென்னை: தமிழகத்தில் கொரோனா பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் ஊரடங்கை மேலும் நீட்டிப்பதா என்பது குறித்து மருத்துவ நிபுணர் குழுவுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை 10 மணியளவில் ஆலோசனை நடத்த இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, அமைக்கப்பட்ட அனைத்துக் கட்சி ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டம் இன்று காலை 11 மணியளவில் நடைபெறும் என்று கூறப்பட்டது. திமுக சார்பில் மருத்துவர் எழிலன், அதிமுக சார்பில் முன்னாள் சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கர் உட்பட 13 பேர் இந்தக் குழுவில் இடம் பெற்றுள்ளனர். தமிழகத்தில் இம்மாதம் 24ஆம் தேதி வரை தற்போது ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், கொரோனா கட்டுப்பாடுகளை மேலும் தீவிரப்படுத்துவது, ஊரடங்கை நீட்டிப்பதா என்பது குறித்து அந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டு அறிவிப்புகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கை அகதிகள் முகாமில்
37 பேருக்குத் தொற்று
ஓசூர்: கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் பகுதியில் கொரோனா கிருமித் தொற்றால் தினமும் கிட்டத்தட்ட 300 பேர் வரை பாதிக்கப்பட்டு வருகிறார்கள். அரசு மருத்துவமனைகளில் போதிய படுக்கை வசதிகள் இல்லாததால் கொரோனா நோயாளிகளின் நிலைமை மோசமடைந்திருப்பதாகக் கூறப்படுகிறது. ஓசூர் அருகே கெலவரப்பள்ளி அணை பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் மறுவாழ்வு முகாமில் 528 பேர் வசித்து வருகின்றனர். கடந்த ஒரு வாரமாக அடுத்தடுத்து அவர்களில் 37 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது. அவர்களில் 32 பேருக்கு முகாமிலேயே சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் ஐவர் மட்டும் ஓசூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனையடுத்து, அந்த முகாம் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு செல்லவோ, அங்கிருந்து வெளியேறவோ யாருக்கும் அனுமதி இல்லை. போலிஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
புதுச்சேரி: புதிதாக ஆயிரத்துக்கு மேற்பட்டோருக்குத் தொற்று
பாண்டிச்சேரி: புதுச்சேரியில் புதிதாக 1,702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. மேலும் 26 பேர் அங்கு கொரோனா தொற்றுக்குப் பலியாகியிருப்பதாக நேற்று அம்மாநில சுகாதாரத்துறை செயலாளார் அருண் வெளியிட்ட அறிக்கை தெரிவிக்கிறது. புதுச்சேரி மாநிலத்தில் 9,043 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், புதுச்சேரியில் 1,340, காரைக்காலில் 249, ஏனாமில் 76, மாஹேவில் 37 என மொத்தம் 1,702 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது என்றும் புதுச்சேரியில் 22 பேர், காரைக்காலில் 4 பேர் என 26 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர் என்றும் அவர் குறிப்பிட்டார். மாநிலத்தில் இதுவரை 93,167 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உள்ளனர். தற்போது மருத்துவமனைகளில் 2,106 பேரும், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் 15,830 பேரும் சிகிச்சையில் உள்ளனர்.

