செய்திக்கொத்து

செய்திக்கொத்து

3 mins read
a69f8ccd-1fd7-43a6-9744-12f94c858776
-

கருப்புப் பூஞ்சை தொற்றுக்கான மருந்து தட்டுப்பாடு

சென்னை: கொரோனா கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் சிலரைத் தாக்கக்கூடிய கருப்புப் பூஞ்சை நோயைக் குணப்படுத்தப் பயன்படும் மருந்துக்குத் தமிழகத்தில் தட்டுப்பாடு நிலவுவதாகக் கூறப்படுகிறது. இந்திய அளவில் கிட்டத்தட்ட 2,000 பேர் இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படும் நிலையில் தமிழகத்தில் மதுரை, விழுப்புரம் மாவட்டங்களில் பலர் பாதிக்கப்பட்டு உள்ளனர். மதுரையில் மட்டும் 50க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர்களில் 9 பேருக்கு தொற்று தீவிரமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. சென்னையில் 12 வயது சிறுமியும் இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். புதுவையில் 20 பேருக்கு இந்தத் தொற்று ஏற்பட்டுள்ளது. மகாராஷ்டிர மாநிலத்தில் 1,500க்கும் அதிகமானோர் இந்த நோயால் பாதிக்கப்பட்ட நிலையில் அவர்களில் 90 பேர் வரை உயிரிழந்ததாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நோயின் சிகிச்சைக்குப் பயன்படும் மருந்தைத் தயாரிக்க மேலும் ஐந்து நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அரசு பங்களாவில் தங்க எதிர்க்கட்சி தலைவருக்கு அனுமதி

சென்னை: தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி சென்னை கிரீன்வேஸ் சாலையில் பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பங்களாவில் தொடர்ந்து தங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அவர் வைத்த கோரிக்கையை ஏற்று 2011 முதல் தங்கியிருக்கும் பங்களாவில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தாம் குடியிருந்த பங்களாவை காலி செய்யத் தொடங்கிய

ஓ.பன்னீர்செல்வம், தனது தம்பி மறைவால் முழுமையாக காலி செய்ய அவகாசம் கேட்டுள்ளார். முன்னாள் அமைச்சர்கள் பலர் தங்களது பங்களாக்களை காலி செய்த நிலையில் புனரமைப்புப் பணிகள் நடந்து வருகின்றன. அந்தப் பணிகள் முடிந்த பிறகு புதிய அமைச்சர்களுக்கு பங்களாக்களை பொதுப்பணித்துறை ஒப்படைக்க உள்ளது.

கொரோனா நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்சில் தீ

கோயமுத்தூர்: கோவை அரசு மருத்துவமனையில் கொரோனா கிருமித்தொற்று கண்ட நோயாளியுடன் காத்திருந்த ஆம்புலன்சில் தீப்பற்றியது. அதில் இருந்த இரண்டு ஆக்சிஜன் உருளைகளில் ஒன்று திடீரென வெடித்ததால் தீப்பற்றியதாகக் கூறப்பட்டது. அந்த ஆம்புலன்சில் இருந்த நோயாளி உயிருடன் மீட்கப்பட்டார். பல அடி உயரத்துக்கு தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் மருத்துவமனையில் இருந்த தீயணப்புக் கருவிகளால் தீயை முற்றிலும் அணைக்க முடியவில்லை. அங்கு சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் அரை மணி நேரம் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்.

மாற்றுத் திறனாளிகளுக்கு வீட்டில் சென்று தடுப்பூசி போட ஏற்பாடு

சென்னை: தமிழகத்தில் கொரோனா கிருமித்தொற்று வெகுவாகப் பரவி வரும் நிலையில் அதனைக் கட்டுப்படுத்தும் நோக்கில் தடுப்பூசி போடும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. முன்னுரிமை அடிப்படையில் முன்களப் பணியாளர்கள், சுகாதாரத் துறை ஊழியர்கள்,

45 வயதுக்கு மேற்பட்டவர்கள் போன்றோருக்கு தடுப்பூசி போடப்பட்ட நிலையில் கடந்த 3 நாள்களுக்கு முன்பு 18 வயதிற்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கியது. இதனைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் சிரமம் இல்லாமல் தடுப்பூசி போட்டுக்கொள்வதற்கு சிறப்பு தடுப்பூசி முகாம்கள் அமைத்து செயல்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு தெரிவித்தது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் மண்டபத்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாமை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். அதில் முதற்கட்டமாக 40 பேர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.இந்தத் திட்டத்தின் மூலம், சிறப்பு மையங்களுக்குச் சென்று தடுப்பூசி போட்டுக்கொள்ள முடியாத மாற்றுத் திறனாளிகளுக்கு அவர்களது வீட்டுக்கே சென்று தடுப்பூசி போடப்படும் என்றும் இதற்கான உதவி எண்கள் விரைவில் அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.