தமிழகத்துக்கு மேலும் 2.23 லட்சம் கொவிஷீல்ட் தடுப்பூசிகள் வருகை
சென்னை: மகாராஷ்டிர மாநிலம், புனேயில் இருந்து 2 லட்சத்து 23,060 கொவிஷீல்ட் தடுப்பூசிகள் விமானம் மூலம் சென்னை வந்து சோ்ந்தன. இந்தத் தடுப்பூசிகள் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் பிரித்து வழங்கப்படும் என சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா். தமிழகம் முழுவதும் சுமாா் 5,000 மையங்களில் தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வந்த நிலையில், தற்போது போதிய அளவு தடுப்பூசி கையிருப்பு இல்லாததால் தமிழகத்துக்கு கூடுதலாக தடுப்பூசிகளை வழங்கும்படி மத்திய அரசிடம் தமிழக அரசு கோரியது. இந்தக் கோரிக்கையை ஏற்று மத்திய அரசு தமிழகத்துக்கு தடுப்பூசிகளை அனுப்பி ைவத்துள்ளது.
முதல்வர்: மே மாதக் கடைசி அல்லது ஜூன் மாதம் பாதிப்பு உச்சம் தொடும்
சென்னை: கொரோனா கிருமிப் பரவலால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை இம்மாதக் கடைசியில் அல்லது ஜூன் மாதத் தொடக்கத்தில் உச்சம் தொடும் என்று எதிர்பார்க்கப் படுவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.
தற்போது தமிழகத்தில் நாள்தோறும் 35,000 போ் தொற்றால் பாதிக்கப்படும் நிலை உள்ளது. இம்மாநிலத்தை விடவும் மக்கள் தொகை குறைவாக உள்ள சில அண்டை மாநிலங்களில் தொற்றின் பாதிப்பு 50 ஆயிரத்துக்கும் மேலாக உள்ளது. இச்சூழலில், தமிழகத்தில் கொரோனா தொற்று மே மாத இறுதியிலோ அல்லது ஜூன் மாதத் தொடக்கத்திலோ உச்ச நிலையை எட்டும் என கருத்துகள் தெரிவிக்கப் பட்டுள்ளதாக முதல்வா் மேலும் கூறியுள்ளார்.
4,500 பேருந்துகள் இயங்கின; காற்றில் பறந்தன விதிமுறைகள்
மதுரை: தமிழகத்தில் இன்று முதல் தளர்வற்ற முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால், தங்களது சொந்த ஊர்களுக்குச் செல்வதற்காக பேருந்தில் பயணம் செய்ய மக்கள் கூட்டம் கூட்டமாகக் குவிந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தங்களது சொந்த ஊர் திரும்பும் மக்களின் வசதிக்காக தமிழகத்தில் நேற்று 4,500 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் மக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டி யதே எங்கள் நோக்கம் என்றும் மதுரையில் செய்தியாளர்களிடம் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் தெரிவித்தார்.
இந்நிலையில், பேருந்துகளில் 50% பயணிகள் மட்டுமே பயணம் செய்யவேண்டும் என்ற விதிமுறை உள்ள நிலையில், மக்கள் முண்டியடித்து பேருந்துகளில் ஏற அலைமோதினர். சென்னை, கோவை உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மக்கள் விதிமுறைகளை காற்றில் பறக்கவிட்டனர். படம்: ஊடகம்
ஆக்சிஜன் வசதி கொண்ட ஆட்டோவுடன் உதவும் சீதாதேவி
சென்னை: கடந்த ஒன்றாம் தேதி சீதாதேவி தனது தாயாரை அழைத்துக்கொண்டு இரு மருத்துவமனைகளுக்கு விரைந்தும் ஆக்சிஜன் படுக்கை கிடைக்காததால் சென்னை கொடுங்கையூரைச் சேர்ந்த சீதாதேவி என்ற பெண்ணின் தாயார் உயிரிழந்துவிட்டார். இதனால் மனம் கலங்கிய சீதாதேவி, இந்த நிலைமை வேறு யாருக்கும் வரக்கூடாது என்பதற்காகத் தன் நண்பர்களுடன் இணைந்து ஆட்டோ ஒன்றில் ஆக்சிஜன் சிலிண்டர் வைத்து கொரோனா நோயாளிகளைக் காப்பாற்ற தனி ஒருவராகப் போராடி வருகிறார். அத்துடன், தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உணவளிப்பது, மருத்துவ உதவிகளை வழங்குவது என்றும் தனது சேவையை விரிவுபடுத்தி வருகிறார்.

