அமெரிக்காவில் இருந்தபடி கூலிப்படையை ஏவி மனைவியைக் கொன்ற கணவர்

2 mins read
b5935038-3e36-4b8d-861b-57d81ccb69c3
உயிரிழந்த ஜெயபாரதி, நடிகர் சந்தானத்தின் உறவினர் ஆவார். படம்: தமிழக ஊடகம் -

நடிகர் சந்தானத்தின் உறவுப் பெண் ஒருவரை அவரது கணவர் கூலிப்படை வைத்து கொலை செய்துள்ளார்.

இதையடுத்து அமெரிக்காவில் உள்ள அந்தப் பெண்ணின் கணவரைக் கைது செய்ய போலிசார் உரிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

திருவாரூரைச் சேர்ந்த சிதம்பரம் என்பவரின் மகளான 28 வயது ஜெயபாரதிக்கும் தஞ்சையைச் சேர்ந்த 33 வயதான விஷ்ணு பிரகாஷுக்கும் 6 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. விஷ்ணு பிரகாஷ் அமெரிக்காவில் பணியாற்றுகிறார்.

திருமணத்துக்குப்பின் அமெரிக்காவில் வசித்து வந்த இத்தம்பதியருக்கு 3 வயதில் பெண் குழந்தை உள்ளது.

இந்நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக அமெரிக்காவில் இருந்து சொந்த ஊர் திரும்பிய ஜெயபாரதி, விவாகரத்து கோரி விண்ணப்பித்துள்ளார். தாய் வீட்டில் தங்கி இருந்தபடியே உள்ளூர் தபால் நிலையத்தில் தற்காலிக ஊழியராகவும் பணியாற்றினார்.

இந்நிலையில் தினமும் இருசக்கர வாகனத்தில் பணிக்குச் சென்று திரும்பிய ஜெயபாரதி மீது கடந்த 21ஆம் தேதி சரக்கு லாரி ஒன்று வேகமாக மோதியதில் அவர் உயிரிழந்தார்.

தனது தங்கையின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக ஜெயபாரதியின் அண்ணன் போலிசில் புகார் அளித்ததை அடுத்து, வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.

போலிசார் நடத்திய விசாரணையில், அமெரிக்காவில் உள்ள ஜெயபாரதியின் கணவர்தான் கூலிப்படையை ஏவி தன் மனைவியைக் கொலை செய்தார் என்பது அம்பலமானது.

சரக்கு வாகனத்தை ஓட்டிய 24 வயது பிரசன்னா, வாகன உரிமையாளர் உள்ளிட்ட 4 பேர் போலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதையடுத்து விஷ்ணுபிரகாஷ் மீது கொலை வழக்கு பதிவாகி உள்ளது. அவரைக் கைது செய்து இந்தியாவுக்கு அழைத்துவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. உயிரிழந்த ஜெயபாரதி நடிகர் சந்தானத்தின் உறவினர் ஆவார்.

குறிப்புச் சொற்கள்