1.72 லட்சம் மீனவக் குடும்பத்துக்கு தலா ரூ.5,000 நிவாரண உதவி
சென்னை: தமிழகத்தில் உள்ள 1.72 லட்சம் மீனவக் குடும்பங்களுக்கு தலா ரூ.5,000 நிவாரண உதவி வழங்கப்படும் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளது மீனவ மக்களை மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தியுள்ளது.
ஒவ்வொரு வருடமும் மீன்பிடித் தடைக்காலத்தின்போது மீனவர்கள் மீன்பிடிக்கச் செல்லாமல் இருப்பதால் அவர்களின் வருமானம் பாதிக்கப்படுவதால் இந்த நிவாரணம் வழங்கப்படுவதாகவும் இதன் மூலம் தமிழகத்திலுள்ள 1.72 லட்சம் மீனவக் குடும்பத்தினர் பயன் பெறுவர் என்றும் அறிவித்துள்ளார்.
வீடுவீடாக கழுதைப் பால் விற்பனை
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில் பருவநிலை மாற்றம் காரண மாக நிறைய பேர் சளி, இருமல், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா அச்சமும் இங்குள்ள மக்கள் மத்தியில் தலைகாட்டுவதால், "சளி, இருமல், காய்ச்சலை கழுதைப்பால் உடனே குணப்படுத்தும். கொரோனாவை விரட்டக்கூடிய அளவுக்கு நோய் எதிர்ப்புச் சக்தியும் கழுதைப்பாலில் உள்ளது," என்று சொல்லி தர்மபுரி மாவட்டம் முழுவதும் கழுதைப் பால் விற்பனை நடைபெற்று வருகிறது. கழுதையுடன் வீடுவீடாகச் சென்று ஒரு குவளை பால் ரூ.50 முதல் ரூ.100 வரை விற்று வருகின்றனர்.
துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை
சென்னை: யாஸ் புயல் காரணமாக தமிழகத்தில் உள்ள சென்னை, நாகை, கடலூர் துறைமுகங்களில் மூன்றாம் எண் புயல் எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. இப்புயல் மேற்கு வங்கம், வடக்கு ஒடிசா கடற்கரைப் பகுதி யில் நாளை கரையைக் கடக்கும் என கணித்துள்ளனர்.

