12 பேருக்குத் தூக்குத் தண்டனை

12 பேருக்குத் தூக்குத் தண்டனை

2 mins read
8452f901-a1db-4028-8011-42c1bbf16ec0
-

லாரி ஓட்டுநர்களைக் கொன்று, வாகனத்துடன் சரக்குகளைக் கடத்திய கும்பலைச் சேர்ந்தோர்

விஜயவாடா: லாரி ஓட்­டு­நர்­க­ளை­யும் உத­வி­யா­ள்­க­ளை­யும் கொன்­று­விட்டு, வாக­னத்­தோடு சரக்­கு­களைக் கடத்தி விற்ற கும்­ப­லைச் சேர்ந்த 12 பேருக்கு ஆந்­திர மாநிலம், ஓங்­கோ­ல் அமர்வு நீதி­மன்­றம் தூக்­குத் தண்­டனை விதித்­துத் தீர்ப்­ப­ளித்­துள்­ளது.

இந்­தி­யா­வில் ஒரே வழக்­கில் இத்­தனை பேருக்­குத் தூக்­குத் தண்­டனை விதிக்­கப்­பட்­டி­ருப்­பது இதுவே முதன்­முறை.

அக்­கும்­ப­லைச் சேர்ந்த மேலும் நால்­வ­ருக்கு ஆளுக்­குப் பத்­தாண்டு சிறை­யும் இரு­வ­ருக்கு ஏழாண்டு சிறை­யும் விதிக்­கப்­பட்­டுள்­ளது.

கடந்த 2008ஆம் ஆண்டு சென்னை-கோல்­கத்தா நெடுஞ்­சாலை­யில் அறு­வர் கொல்­லப்­பட்­டது தொடர்­பான மூன்று கொலை, கடத்­தல் வழக்­கு­களில் அவர்­க­ளுக்­குத் தொடர்­பி­ருந்­தது உறு­திப்­ப­டுத்­தப்­பட்­டது. கொலை­யுண்­டோ­ரில் ராமர் சேகர், பெரு­மாள் சுப்­பி­ர­மணி­யம் என்ற இரு­வ­ரும் தமிழ்­நாட்­டைச் சேர்ந்­த­வர்­கள்.

அக்­கும்­பல் மீது மொத்­தம் 11 கொலை வழக்­கு­கள் சுமத்­தப்­பட்ட நிலை­யில், நான்கு வழக்­கு­கள் போதிய சான்­று­க­ளின்­றித் தள்­ளு­படி செய்­யப்­பட்­டன. இன்­னும் மூன்று வழக்­கு­கள் நீதி­மன்­றத்­தில் நிலு­வை­யில் உள்­ளன. அவர்­கள் 9 மி.மீ. 'கார்­பைன்' துப்­பாக்கி வைத்­தி­ருந்த குற்­ற­மும் மெய்ப்­பிக்­கப்­பட்­டது.

பிர­கா­சம் மாவட்­டத்­தைச் சேர்ந்த முகம்­மது அப்­துல் சமத் எனும் முன்னா பாய் அக்­கும்­ப­லின் தலை­வனா­கச் செயல்­பட்­டான்.

அக்­கும்­ப­லைச் சேர்ந்­த­வர்­கள் இரவு நேரத்­தில் போலிஸ்­கா­ரர்­கள் போல் வேட­மிட்டு, சரக்கு வாக­னங்­களை வழி­ம­றித்து, ஆவ­ணங்­களைக் கேட்­பார்­க­ளாம். ஆவ­ணங்­களைக் கொண்டு வரும் ஓட்­டு­நர்­க­ளை­யும் உத­வி­யாள்­க­ளை­யும் தாக்­கிக் கொன்று விட்டு, லாரி­யைக் காட்­டுப் பகு­திக்­குள் ஓட்­டிச் சென்றுவிடு­வார்களாம்.

2008 அக்­டோ­ப­ரில் மேற்கு வங்க மாநி­லத்­தி­லி­ருந்து தமிழ்­நாட்­டிற்கு இரும்­புக் கம்­பி­களை ஏற்றி வந்த லாரி மாய­மா­னதை அடுத்து, அக்­கும்­ப­ல் அரங்கேற்றிய கொடூரங்கள் வெளிச்­சத்­திற்கு வந்தன.