பெங்களூரு: கொவிட்-19 தொற்று சிகிச்சைக்குக் கட்டணம் செலுத்துவதற்காக விவசாயி ஒருவர் தமது இரண்டு ஏக்கர் நிலத்தை விற்ற சம்பவம் கர்நாடக மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது. ஹசன் மாவட்டத்தைச் சேர்ந்த மஞ்சுநாத் என்ற அந்த விவசாயியின் 18 வயது மகள் முதலில் தொற்றால் பாதிக்கப் பட்டார். பத்து நாள்கள் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றபின் கடந்த 18ஆம் தேதி அவர் வீடு திரும்பினார். இதற்கிடையே, மஞ்சுநாத்தின் மனைவிக்கும் தொற்று உறுதியானது. மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றும் அவர் கடந்த 20ஆம் தேதி இறந்துவிட்டார். மஞ்சுநாத்தின் மகனுக்கும் தொற்று உறுதியாக, அவர் வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார். தொற்றுக்காக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மஞ்சுநாத், நிலத்தை விற்றதன் மூலம் கிடைத்த இரண்டரை லட்ச ரூபாய் மகள், மனைவியின் சிகிச்சைக்குச் சரியாகிவிட்டது என்றும் இப்போது மேலும் ஒன்றரை லட்ச ரூபாய் கடன் வாங்கியுள்ளதாகவும் கூறினார். இதையடுத்து, தங்களுக்கு உதவும்படி அரசாங்கத்திற்கு அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். இதைத் தொடர்ந்து, அவர்கள் சிகிச்சை பெற்ற தனியார் மருத்துவ மனையைத் தொடர்புகொண்டு வருவதாக அர்சிக்கெரெ வட்டாட்சியர் தெரிவித்தார்.
கொவிட்-19 தொற்று சிகிச்சைக்காக நிலத்தை விற்றார்
1 mins read
-

