செய்திக்கொத்து

செய்திக்கொத்து

2 mins read
19dc1c04-0e52-4361-bbb5-e1c253640991
இந்த துளை வழியாகத்தான் திருடர்கள் 480 உயர் ரக மது போத்தல்களைத் திருடிச்சென்றதாகக் கூறப்படுகிறது. படம்: தமிழக ஊடகம் -

மலிவு விலையில் 13 மளிகைப் பொருள்கள் விற்பனை

சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டை தாரர்களுக்கும் கோதுமை, உப்பு, ரவை, சா்க்கரை, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, புளி, கடுகு, சீரகம், மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், குளியல் சோப், துணி துவைக்கும் சோப் ஆகிய 13 வகையான மளிகைப் பொருள்கள் அடங்கிய தொகுப்புப் பையை மலிவு விலையில் தமிழக அரசு விற்பனை செய்ய உள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் ஜூன் 3ஆம் தேதியன்று, அரிசி அட்டைதாரர்களுக்கு இரண்டாம் கட்டமாக ரூ.2,000 கொரோனா நிவாரண நிதி வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். அத்துடன், இந்த மளிகைப் பொருள்கள் தொகுப்பை வழங்கும் திட்டமும் தொடங்கப்பட உள்ளது.

மகேந்திரனுக்கு இரு கட்சிகள் வலை

கோவை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் துணைத் தலைவர் டாக்டர் மகேந்திரன், அண்மையில் அக்கட்சியில் இருந்து விலகினார். அவரை, தங்களது கட்சியின் பக்கம் இழுக்க பாஜக, திமுக முயன்று வருவதாகச் சொல்லப்படுகிறது.

கோவை மாவட்டத்தில் பலவீனமாக உள்ள திமுகவை மகேந்திரனை வைத்து பலப்படுத்த வியூகம் வகுத்துள்ள திமுக, அவருக்கு முக்கிய பொறுப்பைக் கொடுக்கவும் முயன்று வருகிறது. அதேபோல பாஜகவும் அவரை தனது கட்சிக்குள் இழுக்க காய் நகர்த்தி வருகிறது. இருப்பினும், மகேந்திரன் திமுகவின் பக்கம் சாயவே அதிக வாய்ப்புகள் உள்ளதாகச் சொல்லப்படுகிறது.

சுவரைத் துளையிட்டு ரூ.1 லட்சம் மது போத்தல்கள் திருட்டு

கடலூர்: தமிழகத்தில் தளர்வில்லா ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், மதுக்கடைகளும் மூடப்பட்டு உள்ளன. இந்நிலையில், கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே உள்ள பின்னலூர் கிராமத்தில் வயல்வெளிப் பகுதியில் உள்ள 'டாஸ்மாக்' கடையில் நேற்று முன்தினம் நள்ளிரவு நேரத்தில் கடையின் பின்புற சுவரில் துளைபோட்டு உள்ளே புகுந்த கொள்ளையர்கள், அங்கு 10 அட்டைப்பெட்டிகளில் இருந்த 480 உயர் ரக மது போத்தல்களைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். இதன் மதிப்பு ரூ.1 லட்சம் என்று கூறப்படுகிறது. சேத்தியாத்தோப்பு போலிசார் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திடீரென உடைந்த பாலம்;

20 கிராம மக்கள் பெரும் அவதி

திண்டிவனம்: விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - வந்தவாசி தேசிய நெடுஞ்சாலையில் இருந்த பாலம் திடீரென உடைந்து உள்வாங்கியதை அடுத்து, 20க்கும் மேற்பட்ட கிராம மக்கள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர்.

இதனால், இந்தச் சாலையைப் பயன்படுத்தி வந்த ஏறக்குறைய 20,000 பேர், 10 கிலோ மீட்டர் வரை சுற்றிக்கொண்டு செல்லும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே, தங்களுக்கு பெரும் தலைவலியாகி உள்ள இந்தப் பிரச்சினைக்கு மாவட்ட நிர்வாகம் துரித நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.