வேலூர்: தமிழகத்தில் கொரோனா கிருமிப் பரவலைத் தொடர்ந்து, கறுப்புப் பூஞ்சை நோயாலும் மக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், சேண்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் முருகானந்தம், 44. கிருமி பாதிப்பில் இருந்து அண்மையில்தான் மீண்டார்.
இதைத்தொடர்ந்து மீண்டும் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட, பரிசோதனையில் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதன் பின்னர், அவரது இடது கண்ணும் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
இந்நிலையில், தீவிர சிகிச்சைப் பிரிவில் தொடர் சிகிச்சை பெற்று வந்த முருகானந்தம் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் 40 பேர் கறுப்புப் பூஞ்சை நோய்க்கு சிகிச்சை பெறுகின்றனர். இவர்களில் 13 பேர் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் ஆவர்.
இதற்கிடையே, இந்த கறுப்புப் பூஞ்சை நோயைக் கட்டுப்படுத்துவது குறித்து இன்று மருத்துவ வல்லுநர்களுடன் சுகாதாரத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்த உள்ளதாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

