சென்னை: கோவை, திருப்பூர் உள்ளிட்ட ஆறு மாவட்டங்களில் கொரோனா பரவலின் தாக்கம் இன்னும் ஒரு கட்டுக்குள் வரவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
தமிழகத்தில் அமலில் உள்ள ஒரு வார தளர்வற்ற முழு ஊரடங்கு வரும் திங்கட்கிழமையுடன் முடிவடைய உள்ள நிலையில், இந்த ஊரடங்கு தொடர்ந்து நீட்டிக்கப் படுமா? அல்லது தளர்வுடன் கூடிய ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா? என்பது தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
சென்னை தலைமைச் செய லகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் தலைமைச் செயலாளர், சுகாதாரத்துறைச் செயலாளர், வருவாய்த் துறைச் செயலாளர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தளர்வில்லா ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாகவும் ஏதேனும் தளர்வுகள் அளிக்கலாமா என்பது குறித்தும் முதல்வர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இதைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர்களுடனும் மருத்துவ வல்லுநர் குழு, சட்டமன்ற உறுப்பினர் குழுவுடனும் முதல்வர் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது.
இந்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு தொடர்பான அறிவிப்பு இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே, கிருமி பாதிப்பு அதிகமுள்ள கோவை, திருப்பூர், மதுரை, திருச்சி, சேலம், ஈரோடு ஆகிய ஆறு மாவட்ட ஆட்சியர்களுடனும் காணொளி வாயிலாக முதல்வர் ஆலோசித்தார்.
அப்போது, கிருமிப் பரவல் அதிக முள்ள பகுதிகளைக் கண்காணித்து, அங்கு போதிய அளவில் பரிசோதனையை மேற்கொள்ள உத்தரவிட்டார். கோவை, சேலம் ஆகிய மாவட்டங்களில் அதிகள வில் தடுப்பூசி போடப்பட்டுள்ள தாகவும் மற்ற நான்கு மாவட்டங் களில் 18 முதல் 44 வயதுடையோரை தடுப்பூசி போடச்செய்யவும் ஆட்சி யர்களிடம் முதல்வர் கூறினார்.

