புதுவையில் 350,000 குடும்பங்களுக்கு ரூ.3,000 நிவாரண நிதி அறிவிப்பு
புதுச்சேரி: யூனியன் பிரதேசமான புதுச்சேரியில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் ரூ.3,000 கொரோனா நிவாரண நிதி வழங்கப்படும் என அம்மாநில முதல்வர் ரங்கசாமி அறிவித்துள்ளார். இதற்கு அம்மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனும் ஒப்புதல் அளித்துள்ளார். இதனால் புதுச்சேரியில் உள்ள 350,000 குடும்பங்கள் பயனடையும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
'பரோல்' கேட்டு முதல்வருக்கு கடிதம் எழுதிய சிறைத் தம்பதிகள்
வேலூர்: மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கடந்த 29 ஆண்டுகளாக சிறையில் ஆயுள் தண்டனை அனு பவித்து வரும் நளினியும் முருகனும் 30 நாள்கள் பரோல் கேட்டு முதல்வருக் கும் உள்துறைச் செயலருக்கும் கடிதம் எழுதியுள்ளனர்.
வேலூர் மத்திய ஆண்கள் சிறையில் முருகனும் அவரது மனைவி நளினி பெண்கள் சிறையிலும் அடைக்கப் பட்டுள்ள நிலையில், தாயைக் கவனித்துக்கொள்ளவும் தந்தைக்கு சடங்குகள் செய்யவும் 'பரோல்' வழங்கும்படி தனித்தனியாக முதல்வருக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.
செல்லூர் ராஜு: கிருமித் தடுப்பில் திமுக மெத்தனம் காட்டுகிறது
மதுரை: மத்திய அரசை குறைசொல்லிவிட்டு கொரோனா காலத்தில் எந்த நடவடிக்கையும் எடுக்காமல் திமுக அரசு மெத்தனமாகச் செயல்பட்டு வருவதாக அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு காணொளி வெளியிட்டு விமர்சனம் செய்துள்ளார்.
"கொரோனா காலகட்டத்தில் அதிமுக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் ரத்தினம்போல் இருப்பதாக மக்கள் இன்றளவும் பாராட்டுகின்றனர். ஆனால், திமுக அரசின் நடவடிக்கைகள் மெத்தனமாகவே உள்ளது.
"கொரோனாவால் இறப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளதால், எதிர்காலத்தை நினைத்து பொதுமக்கள் பயந்து வாழ்கின்றனர். அரசும் மாநகராட்சி நிர்வாகமும் துரித நடவடிக்கையை மேற்கொண்டு மக்களைக் காப்பாற்றவேண்டும்,'' எனப் பேசியுள்ளார்.
பத்திரிகையாளர் குடும்பங்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு
சென்னை: கொரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் உள்ள பிரபல செய்தி ஒளிவழியான நியூஸ் 18 தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த குரு ராஜேந்திரன், 44, என்பவர் கொரோனா தொற்றால் கடந்த செவ்வாயன்று காலமானார். அதேபோல், கடந்த 24ஆம் தேதியன்று சன் தொலைக்காட்சியில் பணியாற்றி வந்த செய்தியாளர் கணேசனும் கிருமித்தொற்றால் உயிரிழந்தார். இதேபோல் சில பத்திரிகையாளர்களும் உயிரிழந்தனர்.
இந்நிலையில், தமிழக அரசின் இழப்பீடு அறிவிப்பால் இதர பத்திரிக்கையாளர்களும் ஊடகவியலாளர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
ஆட்டோ அவசர சிகிச்சை வாகனம்: 30 கி.மீ. வரை இலவசப் பயணம்
திருவள்ளூர்: கொரோனாவிலிருந்து குணமடைந்த நோயாளிகள் தங்கள் வீட்டிற்குச் செல்லும் வகையில், 24 மணி நேரமும் இயங்கக்கூடிய இலவச ஆட்டோ அவசர சிகிச்சை வாகனச் சேவை திருவள்ளூர் அரசு தலைமை மருத்துவமனையில் தொடங்கப்பட்டுள்ளது.
இந்தச் சேவையை தொற்றில் இருந்து குணமடைந்தவர்கள் மட்டுமின்றி கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத்திறனாளிகளும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் மருத்துவமனையிலிருந்து 30 கிலோ மீட்டர் தூரம் வரை இலவசமாக இந்த வாகனத்தில் பயணம் மேற்கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

