சென்னை: தமிழக சிறைகளில் ஆறு வயதுக்கு குறைவான குழந்தைகளுடன் சிறைத் தண்டனை அனுபவித்து வரும் ஏழு பெண் கைதிகளையும் உடனடியாக 'பரோலில்' விடுவிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.
அத்துடன் கைதிகள் விடுதலை குறித்து உயர் மட்டக் குழுவினர் எடுக்கும் முடிவுகளையும் இணையத் தளத்தில் வெளியிட வேண்டும் என்றும் கைதிகள் உறவினர்களுடன் பேசுவதற்கு காணொளி அழைப்பு வசதியை செய்துகொடுக்கவேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கத்தால் அதிகமானோர் உயிரிழந்து வரும் நிலையில், சிறைக் கைதிகளை பிணையில் விடுவிப்பது, 'பரோல்' வழங்குவது தொடர்பாக மூத்த வழக்கறிஞர் வைகை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தார்.
அதில், சிறைகளில் ஆறு வயதுக்கு கீழான குழந்தைகளுடன் உள்ள பெண் கைதிகளின் நலனை கருத்தில் கொள்ளவேண்டும் எனவும் வலியுறுத்தி இருந்தார்.
அத்துடன், சிறைகளில் காலியாக உள்ள மருத்துவர், தூய்மைப் பணியாளர்களுக்கான காலிப்பணியிடங்களை போர்க்கால அடிப்படையில் நிரப்பவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டிருந்தார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி அரசுகளும் இரு மாநிலங்களுக்கான சட்டப்பணிகள் ஆணையக் குழுக்களும் அறிக்கை களைத் தாக்கல் செய்தன.
தமிழகத்தின் அறிக்கையில், ஏற்கெனவே சிலர் விடுவிக்கப்பட்டு உள்ளதாகவும் குழந்தைகளுடன் உள்ள ஏழு பெண் கைதிகள் தற்போது சிறையில் உள்ளதாகவும், அவர்களை விடுவிக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு ஜூன் 7 ஆம் தேதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.


