'இந்தியாவிலேயே அதிக தடுப்பூசி போட்ட நகரம் சென்னைதான்'
சென்னை: இந்தியாவில் உள்ள பெருநகரங்களுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, சென்னை நகரில்தான் 45 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு அதிக அளவில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என இம்மாநகராட்சியின் ஆணையர் ககன்தீப் சிங் தெரிவித்துள்ளார்.
சென்னையில் மட்டும்தான் 45 வயதுக்கு மேலானோரில் 55% மக்களுக்குத் தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் இது மற்ற பெரு நகரங்களில் போடப்பட்ட தடுப்பூசிகளின் விழுக்காட்டை விட மிகவும் அதிகம் என்றும் சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.
ஒரே படுக்கையை பகிர்ந்துகொள்ளும் இரு கொரோனா நோயாளிகள்
திருப்பூர்: ஒரே படுக்கையை இரண்டு கொரோனா நோயாளிகள் பகிர்ந்துகொள்ளும் அவல நிலை திருப்பூர் மாவட்டத்தில் தொடர்கிறது.
திருப்பூரில் உள்ள குமரன் நகர் என்ற பகுதியில் உள்ள கொரோனா மையத்தில் போதுமான படுக்கைகள் இல்லை என்றும் இதன் காரணமாக ஒரே படுக்கையில் இரு நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கப்படுவதாகவும் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
அத்துடன், உயிர்வாயுக்காக காத்திருக்கும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் அவர்களில் சிலருக்கு எப்போது படுக்கைகள் கிடைக்கும் என்பதே தெரியாமல் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் ரத்து
சென்னை: தமிழகத்தில் தளர்வற்ற முழு ஊரடங்கு நடப்பில் இருந்து வருவதை அடுத்து, பேருந்துகளும் ஒரு சில சிறப்பு ரயில் போக்குவரத்தும் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்நிலையில், இப்போது வந்துள்ள தகவலின்படி, பயணிகளின் வருகை குறைவு காரணமாக மேலும் நான்கு சிறப்பு ரயில்கள் ஜூன் 16ஆம் ேததி வரை ரத்து செய்யப்படுவதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
திருச்சி-திருவனந்தபுரம், சென்னை எழும்பூர்-ராமேஸ்வரம், மதுரை-புனலூர், சென்னை எழும்பூர்-குருவாயூர் செல்லும் நான்கு சிறப்பு ரயில்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.
ஸ்டாலின்-அழகிரி சந்திக்க வாய்ப்பு
சென்னை: தனது பேரனின் பெயர் சூட்டு விழாவில் கலந்து கொள்வதற்காக சென்னை வந்துள்ள முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி, தனது தம்பியும் முதல்வருமான மு.க. ஸ்டாலினை சந்திக்கும் வாய்ப்பு இருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.
அழகிரியின் மகன் துரை தயாநிதியின் குழந்தைக்கு நேற்று பெயர் சூட்டு விழா நடந்தது. இவ்விழாவில் ஸ்டாலின் பங்கேற்றால் சந்திப்பு நடக்கலாம் என்றும் இல்லையேல் கருணாநிதியின் பிறந்த நாளான ஜூன் 3ல் அண்ணன்-தம்பி சந்திப்பார்கள் என்றும் கூறப்படுகிறது.
ரூ.9 லட்சத்தை விடுவிக்க உத்தரவு
சென்னை: சென்னை கோடம்பாக்கத்தைச் சேர்ந்த விலங்குகள் நல அறக்கட்டளை நிறுவனத் தலைவர் சிவா என்பவர் தொடர்ந்த வழக்கின் தொடர்பில், "கொரோனா ஊரடங்கால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்கள் உள்ளிட்ட வாயில்லா பிராணிகளுக்கு உணவளிப்பதற்காக அரசு ஒதுக்கிய ரூ.9 லட்சம் நிதியை உடனடியாக விடுவிக்கவேண்டும்," என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

