அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்

அதிமுக முன்னாள் அமைச்சர் மீது நடிகை புகார்

2 mins read
81ffb638-0dc7-45cb-b541-21a267e40c38
மணிகண்டனுடன் தான் ஒன்றாக இருக்கும் இந்தப் புகைப்படத்தை நடிகை சாந்தினி செய்தியாளர்களிடம் பகிர்ந்துகொண்டதாக தகவல்கள் கூறுகின்றன. படம்: ஊடகம் -

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக ஆசை காட்டி, மோசம் செய்து விட்டதாக 'நாடோடிகள்' திரைப்பட நடிகை சாந்தினி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

சென்னை பெசன்ட் நகரில் வசித்து வரும் சாந்தினி, 36, 'நாடோடிகள்' உள்பட ஐந்து தமிழ்ப் படங்களில் நடித்துள்ளார்.

மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் நாகஜோதியிடம் சாந்தினி அளித்துள்ள மனுவில், "நான் மலேசிய குடியுரிமை பெற்ற, திருமணமாகாத பெண். மலேசியாவில் சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தில் பணிபுரிந்து வந்தபோது அடிக்கடி நான் சென்னைக்குச் செல்வேன். அப்போது அமைச்சராக இருந்த மணிகண்டனுடன் எனக்குப் பழக்கம் ஏற்பட்டது.

"என்னை விரும்புவதாகவும் திருமணம் செய்துகொள்வதாகவும் அவர் உறுதி அளித்தார்.

"அவரது பேச்சை நம்பி கணவன்-மனைவியாக வாழ்ந்தோம். மூன்று முறை கருவையும் கலைத்துள்ளேன்.

"தற்போது திருமணம் செய்யுமாறு கேட்டால், கூலிப்படையை ஏவி என்னைக் கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். என் புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுவிடுவதாகவும் பயமுறுத்துகிறார்.

"அவர் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து, எனது புகைப்படங்களை மீட்டுத்தர வேண்டும்," என்று கூறியுள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக நியூஸ் 18 ஊடகம் மணிகண்டனைத் தொடர்பு கொண்டபோது, "மூன்று வருடங்களாக அமைச்சராக இருந்துள்ளேன். என் மீது ஒரு சிறிய புகார்கூட கிடையாது. ஒரு புகைப்படத்தை வைத்துக்கொண்டு, ஆட்சியெல்லாம் முடிந்த பின்னர் வந்து மிரட்டுகிறார்கள். ஆட்சியில் இருக்கும்போது பேசியிருந்தால்கூட என்னவென்று கேட்டிருக்கலாம். யாரோ பணம் பறிக்கும் கும்பல் பின்னணியில் இருந்து இவ்வாறு செய்கிறது," எனக் கூறியுள்ளார்.

குறிப்புச் சொற்கள்