அமைச்சர்: 12ஆம் வகுப்பு தேர்வு இணையம் வழி நடத்தப்படாது
திருச்சி: 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகளை இணையம் வழி நடத்துவதற்கான வாய்ப்புகள் இல்லை என பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
திருச்சி மரக்கடை அரசு சையது முர்துசா மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியர்களுக்கான கொரோனா தடுப்பூசி முகாமைத் தொடங்கி வைத்த அமைச்சர், "தமிழகத்தில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு நடத்தப்படுவது நிச்சயம். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. ஆனால், இணையத்தில் நடத்தப்படாது.
"மாணவா்கள் பள்ளிகளுக்கு வந்தே தேர்வெழுத வேண்டும். சுகாதாரத் துறையின் ஒப்புதலுடன் தோ்வுத் தேதி விரைவில் அறிவிக்கப்படும்," என்றார்.
மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாணை வெளியீடு
சென்னை: மூன்று மாதங்களாகத் தொடர்ந்து பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்கள், தாதிகள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்குவது குறித்த அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஆங்கில, ஆயுர்வேத மருத்துவர்களுக்கு ரூ.30,000, முதுநிலை மருத்துவ மாணவர்களுக்கு ரூ.20,000, பயிற்சி மருத்துவர்களுக்கு ரூ.15,000, தாதியர்களுக்கு ரூ.20,000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிராமப்புற சுகாதார தாதியர்கள், 108 அவசர ஊர்தி பணியாளர்கள், 104 அமரர் ஊர்தி பணியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ரூ.15,000 ஊக்கத்தொைகயும் வழங்கப் படும் என அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக சார்பில் அம்மா உணவகங்களில் இலவச உணவு
கோவை: கோயம்புத்தூர் மாநகராட்சிப் பகுதிகளில் செயல்பட்டுவரும் 12 அம்மா உணவகங்களிலும் பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், வால்பாறை ஆகிய இடங்களில் உள்ள அம்மா உணவகங்களிலும் திமுக சார்பில் இலவசமாக உணவு வழங்கப்பட்டு வருகிறது.
உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணியும் வனத்துறை அமைச்சர் கா.ராமச்சந்திரனும் கோவை, மசகாளிபாளையம் பகுதியில் உள்ள அம்மா உணவகத்தில் உணவு வழங்கி திட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
"தொற்றுப் பாதிப்பு அதிகமுள்ள நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களில் உள்ள அம்மா உணவகங்களிலும் இனி இலவச உணவு வழங்கப்படும்," என்று அமைச்சர்கள் கூறினர்.

