சென்னை: ஓட்டேரி எஸ்.எஸ். புரத்தில் சேகர் என்பவர் அதே பகுதியில் உள்ள தமது வீட்டில் மது போத்தல்களைப் பதுக்கி வைத்து கள்ளச்சந்தையில் விற்பனை செய்து வந்தது காவல் துறையின் கவனத்துக்குச் சென்றது.
அதனைத் தொடர்ந்து ஓட்டேரி காவல் நிலைய பெண் உதவி ஆய்வாளர் சஜீபா தலைமையிலான படையினர் அவரது வீட்டிற்குச் சென்று சோதனையிட்டனர். அங்கு பதுக்கி வைத்திருந்த மது போத்தல்களைப் பறிமுதல் செய்ய அவர்கள் முயன்றபோது பெண்கள் உள்ளிட்ட கும்பல் ஒன்றுதிரண்டு அதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது. அங்கிருந்து புறப்பட முயன்ற சஜீபாவை அவர்கள் தாக்கத் தொடங்கினர்.
அப்போது அங்கு வந்து சேர்ந்த மற்றொரு காவல் துறை அதிகாரி மணிவண்ணன் தாக்குதலிலிருந்து சஜீபாவை மீட்க முயன்றார். கும்பல் அவரையும் தாக்கத் தொடங்கியது. மேலும் காவல் துறையினரிடம் இருந்து லத்தியை அக்
கும்பல் பறித்துக்கொண்டது.
இச்சம்பவத்தில் சஜீபா, மணிவண்ணன், காவலர் ஒருவர் என மூவர் காயங்களுடன் மருத்துவ
மனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக தலைமைச் செயலகக் குடியிருப்பு காவல்
துறையினர் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்துக்குச் சென்றனர். தாக்குதலில் ஈடுபட்டவர்கள் அதற்குள் தங்கள் வீடுகளைப் பூட்டிவிட்டு தலைமறைவாகிவிட்டனர். தீவிரத் தேடலுக்குப் பின்னர் பெண்கள் உள்ளிட்ட 11 பேரை காவல் துறையினர் கைது செய்தனர். பின்னர் அவர்கள் அனைவரும் விசாரணைக் கைதிகளாகச் சிறையில் அடைக்கப்பட்டனர்.

