ஆ. ராசா மனைவி காலமானார்
சென்னை: திமுக துணை பொதுச்செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி (படம்), உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 56.
ஆறு மாதங்களாக புற்றுநோயால்
அவதிப்பட்டு வந்த பரமேஸ்வரி,
குரோம்பேட்டையிலுள்ள டாக்டர் ரெலா மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப்
பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். செயற்கைச் சுவாசம் பொருத்தப்பட்டு, மருத்துவர்களும் புற்றுநோயியியல்
துறை நிபுணர்களும் தீவிரமாகக்
கண்காணித்து, சிகிச்சை அளித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி சனிக்கிழமை இரவு 7.10 மணியளவில் அவரது உயிர் பிரிந்தது. அவரது மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
கள்ளச்சாராயம் குடித்த இருவர் பார்வையிழந்து மாண்டனர்
மயிலாடுதுறை: மயிலாடுதுறை சேந்தங்குடியைச் சேர்ந்தவர் பிரபு, 33, அச்சக ஊழியர். அதே பகுதியைச் சேர்ந்த செல்வம், 36, வீராசாமி, 52, சரத்குமார், 28, ஆகியோர் உள்ளிட்ட 6 பேர் அப்பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச் சாராயத்தை வாங்கிக் குடித்துவிட்டு வீட்டிற்குச் சென்றனர். சிறிது நேரத்தில் பிரபு, செல்வம் ஆகியோரின் கண் பார்வை பாதிக்கப்பட்டது. இதையடுத்து, அவரது உறவினர்கள் மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரைச் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பிரபு உயிரிழந்தார். தொடர்ந்து செல்வமும் அவரது வீட்டிலேயே உயிரிழந்தார். கடந்த 10 ஆண்டு காலமாக தமிழகத்தில் கள்ளச்சாராய சாவு குறைந்திருந்த நிலையில், தற்போது ஊரடங்கு காலத்தில் டாஸ்மாக் மதுபானக் கடைகள் மூடப்பட்டிருப் பதைப் பயன்படுத்தி ஆங்காங்கே ஊறல் மற்றும் எரிசாராயம் தயாரிக்கப்பட்டு மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள கிராமப்பகுதிகளில் விற்பனை செய்யப்படுவதாக ஊடகங்கள் தெரிவித்து வருகின்றன.
கருணாநிதி பிறந்தநாளை வீட்டில் கொண்டாட வேண்டுகோள்
சென்னை: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் பிறந்த நாள் ஜூன் 3ம் தேதி வரும் நிலையில் அதுதொடர்பாக, திமுக தலைவர் ஸ்டாலின் கட்சித் தொண்டர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், "மக்களின் உயிரைக் காப்பது ஒன்றே நம் முன் உள்ள தலையாயப் பணி. அதற்காக முழுமையாக அர்ப்பணித்துச் செயலாற்றுவதே கருணாநிதி பிறந்தநாள் விழாவுக்குச் செய்யும் சிறப்பு. ஊரடங்கு காலம் என்பதால் பொதுவெளியில் பிறந்தநாள் விழா நிகழ்வு எதுவும் நடத்திட வேண்டாம். அதற்குப் பதில் அவரவர் இல்லங்களில் கருணாநிதி உருவப் படத்திற்கு மரியாதை செலுத்துங்கள்," என்று ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
அரசின் முடிவுக்கு பாமக எதிர்ப்பு
சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "கோவை, திருப்பூர், மதுரை உள்ளிட்ட 8 மாவட்டங்கள் தவிர மீதமுள்ள 30 மாவட்டங்களில் ஏற்றுமதி நிறுவனங்களைத் திறக்க அரசு அனுமதி அளித்துள்ளது. கிருமிப் பரவலைக் கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் இருக்கும் நிலையில் அதன் நோக்கத்தை சிதைக்கும் வகையிலான இந்த முடிவு மிகவும் ஆபத்தானது. தமிழ்நாடு இன்னும் ஆபத்தான காலகட்டத்தைத் தாண்டவில்லை. இத்தகைய சூழலில் அவசர, அவசரமாக ஏற்றுமதி நிறு
வனங்கள் செயல்பட அனுமதித்தது ஏன் எனத் தெரியவில்லை," என்று அவர் கூறியுள்ளார்.
கிருமிக்கு எதிராக வேப்பிலை
வேதாரண்யம்: பெரும்பாலான கிராமங்களில் கொரோனாவின் பரவல் அதிகமாகக் காணப்படுவதால் வேதாரண்யத்தில் ஆங்காங்கே தெருக்கள் அடைக்கப்பட்டு ஊருக்குள் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆயக்காரன்புலம் 4ஆம் சேத்தி, கோயில்குளம் தெற்கு காட்டில் சாலையை அடைத்து குறுக்கே மரங்களைப் போட்டு மறித்து வேப்பிலைகளைத் தொங்கவிட்டுள்ளனர்.
பால் விலை: ரூ.270 கோடி இழப்பு
நெல்லை: ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்பட்டதால் தமிழக அரசுக்கு 270 கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அந்த இழப்பை சரி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருவதாகவும் பால்வளத் துறை அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். நெல்லையில் ஆவின் உற்பத்தி நிலையத்தை ஆய்வு செய்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், ஊரடங்கு காலத் தில் அத்தியாவசியத் தேவையான பாலை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளர்களிடமிருந்து சரியான முறையில் பெற்று விற்பனை செய்வது தொடர்பான ஆய்வுப் பணிகள்
நடந்து வருவதாகக் கூறினார்.

