புதுடெல்லி: கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை நாடு முழுவதும் சீராக அதிகரித்து வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் இந்நோய்க்கு இதுவரை 50 பேர் பலியாகி உள்ளனர்.
கர்நாடகாவில் இந்த நோய் 35 பேரின் உயிரைக் காவு வாங்கி உள்ளது. தமிழகத்திலும் பூஞ்சை நோய் வேகமாகப் பரவி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த இரு வாரங்களாக ஹரியானாவில் கறுப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்படுபவர் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதாக அம்மாநில முதல்வர் மனோகர்லால் கட்டார் தெரிவித்துள்ளார்.
"இதுவரை 788 பேருக்கு கறுப்புப்பூஞ்சை நோய் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. இவர்களில் 58 பேர் குணமடைந்துள்ளனர். 50 பேர் பலியாகிவிட்ட நிலையில் மற்றவர்களுக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது," என்று முதல்வர் மனோகர்லால் கட்டார் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
கர்நாடகாவில் நேற்றைய நிலவரப்படி பூஞ்சை நோயால் 1,250 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் இதுவரை 35 பேர் உயிரிழந்துவிட்டனர் என்றும் அம்மாநில சுகாதார அமைச்சர் சுதாகர் தெரிவித்துள்ளார்.
இந்த நோய்க்கு சிகிச்சை அளிக்க உதவும் ஆம்போடெரிசின் மருந்துக் குப்பிகளை மத்திய அரசு கர்நாடகாவுக்கு வழங்கி உள்ளது என்றும் முதற்கட்டமாக 10 ஆயிரம் குப்பிகள் வந்துள்ளதாகவும் அமைச்சர் சுதாகர் கூறினார்.
இந்நிலையில் தமிழகத்தில் ஆம்போடெரிசின் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தினத்தந்தி செய்தி ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.
இந்நிலையில் திண்டுக்கல்லைச் சேர்ந்த 42 வயதான ஓட்டுநர் ஒருவர் இந்நோய்க்குப் பலியாகி உள்ளார்.
அரசு, தனியார் மருத்துவமனைகளின் மூக்கு, கண், மூளை, தொற்றுநோய் நிபுணர்கள் 13 பேர் அடங்கிய மருத்துவக் குழுஅமைக்கப்பட்டுள்ளது.
கொரோனா நெருக்கடி வேளையில் அமைத்ததுபோல, கறுப்புப் பூஞ்சைக்கு சிகிச்சைஅளிக்க அரசு மருத்துவமனைகளில் சிறப்பு படுக்கைகள் அமைக்கப்படுகின்றன.

