புதுடெல்லி: சென்ட்ரல் விஸ்டா கட்டுமானப் பணிகளுக்குத் தடை விதிக்க இயலாது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
மேலும், இது தொடர்பாக வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதமும் விதித்துள்ளது.
புதிய நாடாளுமன்றக் கட்டடம், அதைச்சுற்றி அமைக்கப்படும் அரசு அலுவலகங்கள் ஆகியவற்றுடன் பிரதமருக்கான புதிய இல்லம் கட்டும் பணியை சென்ட்ரல் விஸ்டா எனும் திட்டத்தின் கீழே செயல்படுத்தி வருகிறது மத்திய அரசு.
கொரோனா நெருக்கடியில் இதுபோன்ற திட்டங்கள் தேவையற்றவை என எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றன.
இந்நிலையில் இந்தத் திட்டத்தின் ஒட்டுமொத்த கட்டுமானப் பணிகளையும் நிறுத்தி வைக்கக்கோரி டெல்லி உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடுக்கப்பட்டது. நேற்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது சென்ட்ரல் விஸ்டா கட்டுமானம் தேசிய முக்கியத்துவம் வாய்ந்தது என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், அத்தியாவசியமான இந்தப் பணிக்குத் தடை விதிக்க இயலாது என்று கூறியதுடன், வழக்கு தொடுத்த மனுதாரர்களுக்கு அபராதமும் விதித்தது.

