கோல்கத்தா: மேற்கு வங்க மாநிலம் கொரோனா நெருக்கடியைச் சமாளிக்க போராடி வரும் நிலையில், அம்மாநிலத்தின் தலைமைச் செயலாளர் அல்பன் பண்டோபாத்யாயாவை டெல்லிக்கு அழைக்கும் செயலை ஏற்க இயலாது என முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
இது ஒருதலைப்பட்சமான செயல்பாடு என பிரதமர் மோடிக்கு அனுப்பியுள்ள கடிதம் ஒன்றில் அவர் குறிப்பிட்டுள்ளார்.
"கடந்த மூன்று மாதங்களுக்கு முன்புதான் அல்பன் பண்டோபாத்யாயாவின் பணி நீட்டிப்புக்கு ஒப்புதல் தெரிவித்து மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு பிறப்பித்தது. இந்தச் சூழலில் திடீர் மாற்றம் ஏன்?
"மத்திய அரசின் இந்தச் செயல் அதிர்ச்சி அளிக்கிறது. இது ஒருதலைப்பட்சமானது. எனவே இந்த உத்தரவை உள்துறை அமைச்சு திரும்பப் பெற வேண்டும்.
"நாடுமுழுவதும் கொரோனா பரவல் அதிகரித்து அதற்கு எதிரான போராட்டமும் நீடித்து வருகிறது. மேற்கு வங்கத்திலும் கொரோனாவுக்கு எதிரான போரில் இறங்கியுள்ளோம்.
"இந்த இக்கட்டான சூழலில் மாநிலத்தின் தலைமைச் செயலாளரை டெல்லிக்கு அழைப்பது ஏற்க முடியாத செயல்," என தமது கடிதத்தில் முதல்வர் மம்தா பானர்ஜி மேலும் குறிப்பிட்டுள்ளார்.
அண்மையில் 'யாஸ்' புயலால் மேற்கு வங்கத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து கோல்கத்தாவில் பிரதமர் மோடி தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அக்கூட்டத்தை முதல்வர் மம்தா வேண்டும் என்றே புறக்கணித்ததாக புகார் எழுந்துள்ளது.
இந்நிலையில் அம்மாநில தலைமைச் செயலாளர் மீண்டும் மத்திய அரசுப் பணிக்கு அழைக்கப்பட்டுள்ளார். மத்திய அரசின் இந்த நடவடிக்கைக்கு முதல்வர் மம்தா கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

