புதுவையில் ஆட்சியமைக்க முயற்சி செய்யவில்லை: பாஜக எம்எல்ஏ விளக்கம்
புதுவை: புதுவையில் பாஜக தனித்து ஆட்சி அமைக்க முயற்சி செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல என்று புதுவை பாஜக எம்எல்ஏ நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். முதல்வர் ரங்கசாமிக்கு உடல்நிலை சரியில்லாததால் தான் புதிய அமைச்சரவை பதவியேற்பு தாமதமாகி உள்ளதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் குறிப்பிட்டார். புதுவையில் என்.ஆர். காங்கிரஸ் பாஜக இடையேயான கூட்டணி பலமாக உள்ளது என்றும் முதல்வர் ரங்கசாமி தலைமையில் பல்வேறு மக்கள் நலத்திட்டங்கள் அடுத்தடுத்து செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.
பள்ளியில் படித்தபோது பாலியல் தொல்லை: முன்னாள் மாணவிகள் புகார்
சென்னை: பிரபல தனியார் பள்ளியில் படித்தபோது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளானதாக முன்னாள் மணவர்கள் 900 பேர் புகார் அளித்துள்ளனர். இந்தப் புகார்கள் குறித்து பதில் அளிக்குமாறு தமிழக குழந்தைகள் உரிமை பாதுகாப்பு ஆணையம் அப்பள்ளி நிர்வாகத்துக்கு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மேலும் சில தனியார் பள்ளிகளில் மாணவிகள் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக புகார் அளித்து வருவதாக ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கேரளாவில் திடீர் நில அதிர்வு
திருவனந்தபுரம்: கேரளாவில் ஏற்பட்ட திடீர் நில அதிர்வு மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் மாலை சுமார் 6.45 மணி அளவில் கோட்டயம், இடுக்கி, ஆலடி உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நில அதிர்வு சுமார் மூன்று விநாடிகள் மட்டுமே நீடித்தது. நில அதிர்வின்போது வீட்டில் உள்ள பொருட்கள் அசைவதைக் கண்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். எனினும் பெரிய சேதங்கள் எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.
ஆற்றில் மூழ்கி 4 குழந்தைகள் பலி
மும்பை: ஆற்றில் குளிக்கச் சென்ற நான்கு குழந்தைகள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் மகாராஷ்டிராவில் விஜயபுரா பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 10 முதல் 14 வயதுக்கு உட்பட்ட 3 சிறுமிகளும் ஒரு சிறுவனும் ஞாயிற்றுக்கிழமை மாலை பீமா ஆற்றில் குளிக்கச் சென்றனர். அப்போது ஆற்றில் திடீரென ஏற்பட்ட சுழலில் சிக்கி நால்வரும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். ஒரு சிறுமியின் உடல் மட்டுமே கிடைத்துள்ளது. மற்ற 3 பேரின் உடல்கள் தேடப்படுகின்றன.
ஊரடங்கின்போது வெளியே சுற்றித் திரிந்தவர்களுக்கு கட்டாய தடுப்பூசி
விழுப்புரம்: ஊரடங்கின்போது வெளியே சுற்றித் திரிந்தவர்கள் மீது விழுப்புரம் போலிசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மேலும் சுகாதாரத் துறையைச் சேர்ந்த மருத்துவக் குழுவினர் மூலம் பொறுப்பின்றிச் சுற்றித் திரிந்தவர்களுக்கு சாலையில் வைத்தே கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. ஊரடங்கை மீறினால் நடவடிக்கை பாயும் என போலிசார் எச்சரித்துள்ளனர்.
கோவில் பணியாளர்களுக்கு ரூ.4,000
சென்னை: தமிழக கோவில்களில் மாத ஊதியம் இன்றி பணியாற்றும் பணியாளர்களுக்கு உதவித்தொகையாக நான்காயிரம் ரூபாய் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியர்கள், பூசாரிகள் பலனடைவர். உதவித்தொகையுடன் பத்து கிலோ அரிசி, 15 வகை மளிகைப் பொருள்களும் வழங்கப்படுகின்றன.

